அரசும் மொட்டை... ஸ்டாலினும் மொட்டை..! - பொதுத்தேர்வு ரத்து விவகார சர்ச்சை

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து அறிவிப்புக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கூறியுள்ளார். ஆனால், அதில் ஒரு இடத்தில்கூட அவர் ரத்து அறிவிப்பை வரவேற்பதாகக் குறிப்பிடவில்லை.


சிறு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு ஆணையும் வெளியிடப்பட்டு, பரவலான அரசாங்கம் எதிர்ப்பை எதிர்கொண்டிருந்தது. பலத்த எதிர்ப்புகளை அடுத்து இன்று திடீரென பின்வாங்கிய தமிழக அரசு, அச்சமூட்டிய பொதுத்தேர்வை ரத்துசெய்வதாக அறிவித்தது. 

இன்று பிற்பகல் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட இது குறித்த அறிக்கையில், ” 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என கடந்த 13-09-2019 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றன. அவற்றை அரசு கவனமுடன் பரிசீலித்து, இந்த ஆணையை ரத்துசெய்ய முடிவெடுத்துள்ளது. எனவே, ஏற்கெனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசின் இந்த அறிவிப்பில் எப்படி மொட்டையாக இருக்கிறதோ, அதைப்போலவே இன்று மாலையில், திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாணையை ரத்துசெய்தது குறித்து வரவேற்பதாக ஓரிடத்தில்கூட குறிப்பிடவில்லை. அரசாங்கத்தின் மீது அவருக்கு அவ்வளவு கோபம்போல!   

அவருடைய அறிக்கை விவரம்.

பிஞ்சுப் பருவத்திலேயே மாணவர்களின் கல்வி உரிமையைப் பறித்து அவர்களின் எதிர்காலத்தை பார்க்கும் 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடக்கம் முதலே திராவிட முன்னேற்றக்கழகம் கடுமையாக வலியுறுத்தியது. ஆனால், எஜமானர்களின் கைப்பாவையாக உள்ள அதிமுக ஆட்சியாளர்கள், அதற்கு செவிமடுக்க மறுத்து அமைதிகாத்தது மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பொதுத்தேர்வு உண்டு என அரசு ஆணை பிறப்பித்தனர்.

தற்போது திடீர் ஞானோதயம் ஏற்பட்டது போல பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளனர். இதிலாவது தொடர்ந்து உறுதியாக இருக்கவேண்டும். புதிய கல்விக் கொள்கைக்கு அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து மாநிலத்தின் கல்வி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.