வேலூர் தண்ணீர் சென்னைக்கு சென்றால் போராட்டம் வெடிக்கும்! ஏன் அப்படி சொன்னார் துரைமுருகன்?

வேலூரில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு சென்றால் போராட்டம் வெடிக்கும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


தண்ணீர் பிரச்சனையை முன்வைத்து வேலூரில் இன்று துரைமுருகன் தலைமையில் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசினார். அப்போது அவரிடம் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு இங்கிருந்து தண்ணீர் கொண்டு சென்றால் திமுக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும போராட்டம் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு துரைமுருகன் புறப்பட்டார். சென்னை மக்களுக்கு வேலூரில் இருந்து தண்ணீர் கொடுக்க முடியாது என்று துரைமுருகன் பேசியது சர்ச்சையானது.

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் துரைமுருகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுகவிற்குள்ளேயே துரைமுருகனக்கு எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து அவர் தனது காலை பேட்டியை விளக்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: சில பத்திரிகைகள், ஊடகங்கள் தன் கருத்தை திரித்து, சென்னைக்கு நீர் கொண்டு செல்ல துரைமுருகன் எதிர்ப்பு என்று தவறாக பிரச்சாரம் செய்கின்றனர். ஒரு தவறான பிரச்சாரத்தை துவக்கி, அதன் மூலம் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்வதை கண்டிக்கிறேன் என துரைமுருகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காவேரி கூட்டு குடிநீர் திருப்பத்தூரிலிருந்து அரக்கோணம் வரை பல ஊர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைத்து கொண்டிருந்த தண்ணீர் தற்போது 2 நாட்கள் மட்டுமே கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த தண்ணீரை சென்னைக்கு கொண்டு சென்றால் வேலூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுபவார்கள் என்று தான் நான் கூறினேன் அதை திரித்து செய்தி வெளியிட்டுவிட்டார்கள் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.