வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்பது தி.மு.க.வில் முழுக்க முழுக்க இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இந்த நிலையில், மிகத் தீவிரமாக சபரீசனும் கூட்டணி விவகாரத்தில் தலையிடுவது நிர்வாகிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தி.மு.க. கூட்டணியை உடைக்க சபரீசனே போதும்... வேதனையில் தி.மு.க. நிர்வாகிகள்.

ஆம், சமீபகாலமாக கூட்டணி விஷயத்தில் சபரீசன், உதயநிதி உள்ளிட்டவர்களின் தலையீடு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. யாரை கூட்டணியில் சேர்க்க வேண்டும், எத்தனை சீட் கொடுக்க வேண்டும் என்பது உட்பட பல விஷயங்களைச் செய்ய சொல்லி, அவர்கள் ஸ்டாலினுக்கே உத்தரவிடுகிறார்கள். கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஸ்டாலினிடம் தாம் சில யோசனைகளைச் சொன்னதாக உதயநிதியே அண்மையில் ஒப்புக்கொண்டிருந்தார்.
சபரீசனோ, கூட்டணி விஷயத்தை தானே டீல் செய்கிறார். சபரீசன் பேச்சைக் கேட்டு, புதுச்சேரியில் தனித்துப் போட்டி என அண்மையில் ஜெகத்ரட்சகனை அனுப்பி, அவமானப்பட்டதுதான் மிச்சம். புதுச்சேரியில் வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக தனித்துப் போட்டியிடும் என ஜெகத் அறிவித்தார், இதனால், தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இதனால் பதறிய சபரீசன், டெல்லிக்கு விரைந்து ராகுலை சந்தித்து சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், ராகுல் அவரை சந்திக்க மறுத்துவிட்டார். பின்னர் ஸ்டாலின் தலையிட்டு கெஞ்சியதால், காங்கிரஸ் சமாதானமடைந்தது.
இவ்வளவு நடந்த பின்னரும் சபரீசன் அடங்கியபாடில்லை. கமல்ஹாசனுடன் கூட்டணி தொடர்பாக போன் மூலம் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். திமுகவுக்கு நெருக்கமான தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மத்தியஸ்தராக செயல்பட்டுள்ளார். அப்போது திமுக கூட்டணிக்கு வந்தால் 20 இடங்கள் வரை தருகிறோம் என சபரீசன் வாக்குறுதி கொடுத்துள்ளார். கமல் உடனடியாக எந்த பதிலும் தரவில்லை. யோசித்து சொல்வதாகக் கூறி விட்டார்.
இதை சபரீசன் ஸ்டாலினிடம் சொன்னபோது,’’ஏற்கெனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கொடுக்கவே இடங்கள் இல்லை. இதில் கமல் கட்சிக்கு எப்படி கொடுப்பது?’’ என அவர் கேட்டுள்ளார். அதற்கு சபரீசன், காங்கிரஸைப் பொறுத்தவரை நமக்கு வேஸ்ட். அகில இந்திய அளவில் நமக்கு ஒரு சப்போர்ட் வேண்டும் என்பதற்காகத்தான் அதைக் கட்டி அழ வேண்டியதுள்ளது. இருப்பினும் கடந்த 2016 தேர்தலில் கொடுத்தது போல 41 சீட் அளவுக்கு இல்லாமல், அதில் பாதியை மட்டும், அதாவது 20 இடங்கள் மட்டுமே கொடுத்தால் போதுமானது’’ என சொல்லி உள்ளார். இதுவும் காங்கிரஸ் காதுக்கு எட்டி, அந்த கட்சி கடும் ஆத்திரத்தில் இருக்கிறது.
கடந்த முறை விஜயகாந்தால் உடைந்த திமுக கூட்டணி, இந்த முறை கமல்ஹாசனால் உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்த முடியாமல் ஸ்டாலின் தவிப்பதுதான் உண்மை.