கொரோனாவுக்கு திமுக எம்எல்ஏ மைதீன்கான் மகன் பரிதாப மரணம்! அப்பலோவில் சிகிச்சை அளித்தும் பலனில்லை!

பாளையங்கோட்டை திமுக எம் எல் ஏ மைதீன்கானின் மகன் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


திமுகவின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவர் மைதீன்கான் ஆவார். கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்து வந்தவர் மைதீன்கான். இவர் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாளையங்கோட்டை எம்எல்ஏவாக இருந்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை தொகுதியிலேயே தொடர்ச்சியாக மூன்று முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாளையங்கோட்டை எம்எல்ஏ மைதீன்கானின் மகன் காஜா பீர் முகம்மது . இவருக்கு வயது 55. ராயபுரத்தில் வசித்து வந்த காஜா பீர் முகமது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 12ஆம் தேதி வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திமுக எம்எல்ஏ மைதீன்கானின் மகன் கொரோனாவால் உயிரிழந்திருப்பது அக்கட்சியினரிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை அறிந்த திமுக கட்சியினர் மற்றும் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை அறிந்த பல்வேறு கட்சியினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.