பேராசிரியரின் கடைசி நிமிடங்கள்..! கண் கலங்கிய ஸ்டாலின்..! கதறிய உறவுகள்!

பேராசிரியர் அன்பழகனின் கடைசி நிமிடங்கள் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு உணர்ச்சியமானதாக அமைந்தததுடன் அவரை சார்ந்தவர்களையும் மிகவும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


கலைஞர் மறைவுக்கு முன்னதாகவே திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு வயது மூப்பு காரணமாக உடல் நிலையில் குறைபாடு ஏற்படத் தொடங்கியது. கலைஞர் வீட்டிலேயே முடங்கியதை போல்  பேராசிரியரும் வீட்டிலேயே முடங்கியிருந்தார். அவருக்கு அவரது அறையிலேயே மருத்துவ சாதனங்களை பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

அவ்வப்போது சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திரும்பி அங்கு சிகிச்சை தொடர்ந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு முதலே பேராசிரியர் படுத்தபடுக்கையாகிவிட்டார். மாதம் ஒரு முறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று சந்தித்து வந்தார். இந்த ஆண்டு துவக்கத்தில் பேராசிரியருக்கு நினைவு தப்பியது. 

இருந்தாலும் நம்பிக்கையுடன் அவருக்கு சிகிச்சை தொடர்ந்தது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேராசிரியர் மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்பட ஆரம்பித்தார். இதனால் மீண்டும் அவருக்கு அப்பலோவில் அனுமதிக்கப்பட்டு சுவாசிக்க செயற்கை கருவிகள் பொருத்தப்பட்டன. மேலும் தொடர்ந்து மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தான் அவர் வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையே வயது 98 ஆகிவிட்டதால் சிகிச்சை முறைகளை அவரது உடல் ஏற்கவில்லை. மருந்துகள் உள்ளிட்டவற்றால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் பேராசிரியர் உடல் நிலை மோசமான கட்டத்தை எட்டியது. இதனை அறிந்து மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு விரைந்தார்.

அப்போது பேராசிரியர் தனது வாழ்வின் இறுதிகட்டத்தில் இருப்பதாக அவரிடம் சொல்லப்பட்டது. இதனை கேட்ட ஸ்டாலின் கண்கலங்கியுள்ளார். மேலும் அவருடன் வந்தவர்களும் கதறியுள்ளனர். இதற்கிடையே நள்ளிரவு 1 மணிக்கு மேல் பேராசிரியர் மறைந்துவிட்டார் என்கிற தகவல் வெளியே வர ஆரம்பித்தது. 98 வயது வரை  வாழ்ந்த திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நினைவு திரும்பாத நிலையிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறி வேதனைப்படுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.