பாஜக தலைவர் முருகனை வீடு தேடிச் சென்று சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பிதுரைசாமி! பரபரப்பு காரணம்!

தமிழக அரசியலில் பாஜகவும் - திமுகவும் எலியும் பூனையுமாக இருந்து வரும் நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைசாமி திடீரென தமிழக பாஜக தலைவர் எல் முருகனை வீடு தேடிச் சென்று சந்தித்துள்ளார்.


கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பிருந்தே தமிழக அரசியலை பொறுத்தவரை திமுக மற்றும் பாஜக எலியும் பூனையுமாகவே இருந்தன. இந்தியாவில் மற்ற எந்த கட்சியையும் காட்டிலும் பாஜகவை திமுக மிக கடுமையாக எதிர்த்தது. திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி போன்றோர் மோடியை விமர்சித்தே பிரச்சாரங்களில் ஈடுபட்டனர்.

மேலும் தற்போதும் கூட மத்திய பாஜக அரசை திமுக மிக கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த சூழலில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை நேரில் சென்று சந்தித்துள்ளார். முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என்று பிரச்சனை எழுந்த போது நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆணையிட்டவர் எல்.முருகன்.

அதாவது அப்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக முருகன் இருந்தார். அந்த அடிப்படையில் முருகன் ஸ்டாலின், உதய நிதி போன்றோருக்கு சம்மன் அனுப்பினார். இதன் பிறகு முருகன் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் திமுக தரப்பில் இருந்து அவருக்கு வாழ்த்து கூட தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் திடீரென திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி இன்று முருகனை அவரது வீடு தேடிச் சென்று சந்தித்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று விளக்கம்அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இப்படி ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பிற்கு என்ன அவசியம் என்கிற கேள்வி எழுந்துள்ளது. வி.பிதுரைசாமியும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர், முருகனும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். மேலும் இருவருமே நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இந்த அடிப்படையில் சந்திப்பு நிகழ்ந்தாலும் திமுகவில் துணைப் பொதுச் செயலாளர் என உயரிய பதவியில் உள்ள விபி துரைசாமி அரசியல் காரணம் இல்லாமல் முருகனை சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.