” சுங்கச் சாவடி கட்டண நிலையங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்களால் கடுமையான சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைகிற நிலை ஏற்படும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுங்கச்சாவடி விவகாரத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் - அழகிரி எச்சரிக்கை
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட விரிவான அறிக்கை:
” இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏறத்தாழ, 70 ஆயிரத்து 548 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் தங்க நாற்கர சாலை திட்டம், கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு, வடக்கு பெருந்தட வழிகளின் பகுதி மற்றும் முக்கிய துறைமுகங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டுடன் சிறப்பாக செயல்பட்டு வந்தன.
மத்திய அரசும், தனியார் துறையும் இணைந்து இந்த திட்டங்களை கட்டமைத்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து, செயல்படுத்தி, ஒப்படைப்பது (Built, Operate & Transfer - BOT) என்ற திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் துறையுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட பல நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகள் மூலமாக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 54 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் 2018-19 ஆம் ஆண்டில் மட்டும் ரூபாய் 2 ஆயிரத்து 549 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தெரிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும் 100 ரூபாய் வசூலித்தால் தமிழகத்தில் 11 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. சலுகைக்காலம் முடிந்த பிறகு சுங்கக் கட்டணம் 40 சதவிகிதமாக குறைக்கப்பட வேண்டும். ஆனால், அந்த வகையில் கட்டணம் குறைக்கப்படாமல் தொடர்ந்து பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது.
தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் வரை உள்ள நான்கு வழித்தட தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், ஜி.எம்.ஆர். நிறுவனமும் அக்டோபர் 9, 2011இல் செய்து கொண்ட சலுகை ஒப்பந்தம் கடந்த நவம்பர் 8, 2019 இல் காலாவதியாகி விட்டது. இந்த காலத்திற்கு பிறகு சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலிப்பது மிகப்பெரிய பகற்கொள்ளையாகும். இதற்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துணை போவதைவிட கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது. ஏழை, எளிய மக்களை கசக்கிப் பிழிகிற இத்தகைய நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு கண்டும் காணாமலும் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் துறையுடன் இணைந்து அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மிகவும் மோசமாக இருப்பது குறித்து, பலமுறை ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சாலைகளின் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதோடு, பல்வேறு விபத்துகளுக்கும் இவை காரணமாக அமைந்து விடுகிறது.
குறிப்பாக, சென்னை புறவழிச் சாலை மற்றும் வானகரம் - பூந்தவல்லி புறவழிச் சாலை சரியான பராமரிப்போ, விளக்கு வசதியோ இல்லாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
அதுபோல, சென்னை - தடா நெடுஞ்சாலை உரிய பராமரிப்பு இல்லாததால் வாகனங்களில் செல்வது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, நெடுஞ்சாலை அமைக்க வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக, மூன்று மரக்கன்றுகளை நடுவது என்கிற வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
நெடுஞ்சாலைகளில் உள்ள ஓய்விடங்களில் கழிவறை மற்றும் தண்ணீர் வசதி இல்லாத நிலை இருக்கிறது. விபத்துக்கள் ஏற்படும் போது மருத்துவ வசதிகளோ, ஆம்புலன்ஸ் வாகன வசதிகளோ தயார் நிலையில் வைக்கப்படாமல் இருப்பது உயிரிழப்புகளுக்கு ஏதுவாக அமைந்துவிடுகிறது. இதைப் பற்றியெல்லாம் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலை திட்டத்தின் மொத்த தொகை மற்றும் எத்தனை ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் என்கிற விவரங்கள் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட வேண்டும். இதில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒளிவு மறைவோடு நடந்து கொள்வது தான் பல்வேறு முறைகேடுகளுக்கும், ஊழலுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
எனவே, உடனடியாக அறிவிப்பு பலகைகளில் அனைத்து விவரங்களும் வெளியிடப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, வாகனங்களை விலைக்கு வாங்குகிற போது சாலை வரி வசூலிக்கப்படுகிறது. இதைத் தவிர, சுங்கக் கட்டணமும் நிரந்தரமாக வசூலிக்கப்படுவதால் மக்களின் சுமை கடுமையாகி வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் என்பது மக்களை கடும் சுமைக்கு ஆளாக்கி வருகிறது. எதற்காக கட்டணம் செலுத்த வேண்டும், எவ்வளவு காலத்திற்கு செலுத்த வேண்டும், ஏன் செலுத்த வேண்டும் என்கிற நியாயமான புரிதல் கூட இல்லாமல் மக்கள் நிர்ப்பந்தத்தின் காரணமாக கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து, சரியான புரிதல் வழங்குகிற வகையில் துண்டு பிரசுரங்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட வேண்டும். ” என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.