தெருவில் ஒய்யாரமாக வலம் வந்த முதலை! நேரில் பார்த்தவர்கள் செய்த விபரீத செயல்!

வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் கடந்த ஒருவாரமாக வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து வருகிறது. குயின்ஸ்லாந்து உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.


ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகள், ஏரிகள் உள்ளிட்டவை நிரம்பி வழிவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் மற்றும் விளை நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. 

இந்நிலையில் சோதனை மேல் சோதனையாக வெள்ள நீருடன் சேர்ந்து நகரச்சாலைகளில் முதலைகள், பாம்புகள் உள்ளிட்டவை புகுந்துள்ளதால் வெளியில் தலைகாட்டவே மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.  

ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு தாழ்வான  இடங்களில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.தொடர் கனமழை -வெள்ளம் காரணமாக அலுவலகங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

இதனை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  

இதற்கிடையே டவுன்ஸ்வில்லி நகரத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாலையில் முதலைகளை பார்த்த பொது மக்கள் அலறி அடித்து ஓடினர். சிலர் அந்த முதலைகளை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். வேறு சிலரோ செல்ஃபி எடுக்க முயன்று கொண்டிருந்தனர். 

முதலையுடன் செல்பி எடுப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணராமல் அவர்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தனர். பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் மக்கள் அனைவரையும் வீடுகளுக்குள் அனுப்பி முதலையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.