ரூ.80 கோடி! உலகின் காஸ்ட்லி கார் புகாட்டி! ஓனர் யார் தெரியுமா?

உலகின் விலை உயர்ந்த காரை புகாட்டி (Bugatti) நிறுவனம் அறிமுகம் செய்தது. இதற்கு `லா வாய்ச்சூர் நோய்ரி (La Voiture Noire) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் காரின் கீழே, தி ப்ளாக் கார் (The Black Car) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வகையான கார் மிக சிறிய அளவில் தான் தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த காரின் அறிமுகம் தான் அப்போது செம்ம வைரலானது. இந்த கிரகத்தின் காஸ்ட்லியான கார் என இது கொண்டாடப்பட்டது.

இது ஒரு விளையாட்டு வகையான காராகும்.  மணிக்கு 260 மைல் வேகத்தில் செல்லும் அதாவது, சுமார் ஒரு மணிநேரத்திற்கு 418 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன்கொண்டது. இந்த காரின் விலை 11 மில்லியன் யூரோ. இந்திய மதிப்பில், சுமார் 86 கோடி ரூபாய். இந்த கார் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளிவராத நிலையில், நேற்று முதல் ஒரு தகவல் இணையத்தில் பரவிவருகிறது.

அதாவது, கால்பந்து உலகின் முன்னணி வீரரான போர்ச்சுகல் நாட்டைச்சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த காரை வாங்கியுள்ளதாகப் தகவல் பரவியுள்ளது. இது உண்மை என்றாலும் அவரின் கைகளுக்கு இந்த கார் 2021-ம் ஆண்டுதான் கிடைக்கும். இந்தக்காரின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, இந்த காரை ஃபோக்ஸ்வோகன் கார் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஃபெர்டினண்ட் பியீச் என்பவர் ரிசர்வ் செய்திருப்பதாகத் தகவல் வெளியானது. அவர், பென்ஸ் சி க்ளாஸ் ஸ்போர்ட் கார், ரோல்ஸ் ராய்ஸ் பாந்தோம், ஃபெராரி, லாம்போர்கினி, ஆஸ்டோன் மார்டின், பென்ட்லி எனப் பல்வேறு சொகுசு அதிவேக காஸ்ட்லி கார்களை வைத்திருக்கிறார்.

எனினும், இந்த காரை அவர் கண்டிப்பாக வாங்கி இருக்க வாய்ப்பில்லை என்றும் அவ்வாறு வாங்கியதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லையென்று சில செய்தி நிறுவனங்கள் மறுத்தும் செய்திகள் வெளியிட்டுள்ளன.