டெல்லி மாநாடு சென்று வந்த மருமகனிடம் இருந்து மாமியாருக்கு பரவிய கொரோனா..! வேலூர் அதிர்ச்சி!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு அருகில் வசித்த பெண்ணுக்கும் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியா முழுவதிலும் 8,447  பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 765 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 273 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை 1072 பேர் இந்த வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 50 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 12 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதன்முதலாக லண்டன் நகரிலிருந்து வேலூருக்கு வந்த பாதிரியார் ஒருவருக்கு இந்த நோய் தொற்றிருப்பது கண்டறியப்பட்டது.

அவர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்தபடியாக டெல்லி மாநாட்டிலிருந்து வேலூருக்கு திரும்பிய 26 பேர் அவர்களுடைய உறவினர்களுடன் அடுக்கம்பாறை மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டனர். 

அவர்களில் வேலூர், கஸ்பா, சின்ன அல்லாபுரம், கருகம்பத்தூர், ஆர்.என்.பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 4 பேருக்கு நோய் தொற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதில் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரின் மாமனார்,மாமியார்,மனைவி மற்றும் 7 வயது குழந்தை ஆகியோருக்கும் இந்த நோய் தொற்று ஏற்பட்டதை கண்டறிந்தனர். இதனால் ஆர்.என்.பாளையம் பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த பகுதியில் பாதிக்கப்பட்ட 5 பேரின் வீட்டருகே வசித்துவந்த 35 வயது பெண்ணுக்கும் நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்தது. உடனடியாக அவருடைய இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அப்போது அவருக்கும் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. 

ஏற்கனவே பாதிக்கப்பட்ட 5 பேரிடமிருந்து இவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதா என்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் வேலூரில் நேற்று வரை 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.