தமிழகத்தில் கொரோனா பரவுவது எப்போது குறையும்? போதி தர்மர் விஜயபாஸ்கர் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் விரைவில் கொரோனா பரவுதல் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.


உலகை அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. சீனாவில் உள்ள வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் அதனுடைய கோர தாண்டவத்தை காட்டி வருகிறது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல. இதுவரை தமிழகத்தில் 571 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறாமல் இருப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடம் கேட்ட பொழுது, நிலவரத்தைப் பற்றி கூறியிருக்கிறார். அதாவது இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

அதேபோல் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக தனி படுக்கையறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்காக தனியார் மருத்துவமனைகள் ஆன மியாட், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, சவிதா மருத்துவமனை போன்ற தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தியாவிலேயே மொத்தத்தில் 170 இடங்களில் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதில் 17 இடங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பத்து புதிய சோதனை மையங்கள் அமைக்க உள்ளோம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

 இந்த இடங்களில் பி.சி.ஆர் என அழைக்கப்படும் கருவியை பயன்படுத்தி கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கருவியை பயன்படுத்தி சுமார் 5 மணி நேரத்தில் சோதனையை மேற்கொள்ளலாம்.

ஆனால் இதை விட துரிதமாக செயல்படும் கருவிகளையும் தமிழக அரசு வாங்க உள்ளது. 

இதன் மூலம் மிக வேகமாக நோயாளிகளை சோதனை செய்து பார்க்க இயலும் என அவர் கூறியிருக்கிறார். ஒரு லட்சம் கருவிகளை தமிழக அரசு வாங்க உள்ளதாகவும் அந்த கருவிகள் வரும் பத்தாம் தேதிக்குள் கிடைத்துவிடும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

மூச்சு விடுவதில் சிரமம் படுபவர்கள் மற்றும் கடுமையாக சுவாசப் பிரச்சினை உடையவர்கள் அனைவரையும் தீவிரமாக பரிசோதித்து வருகிறோம். உலக சுகாதார அமைப்பு உடன் அவ்வப்போது பேசி அவர்களின் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகிறோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார். மேலும் இந்த வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறி விடக்கூடாது என்பதற்காகத்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற அவர்களை நாங்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து வருகிறோம். அவர்களில் கொரோனா இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களை எளிதில் கண்டறிவதற்காக மைக்ரோ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது இதன் மூலம் சமூக பரவலும் எளிதாக தடுக்க முடியும் வரும் என அவர் கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த கொடூர நோய் தொற்றை தடுப்பதற்காக ரூபாய் 500 கோடியை ஒதுக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது ரூபாய் 3 ஆயிரத்து 200 கோடி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. முறையான வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் விரைவில் கொரோனா தோற்று கட்டுக்குள் வரும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.