இன்னும் 10 நாட்களில் சென்னையில் கொரோனா அவுட்..?! மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சவால்.

இன்னும் மூன்றே நாட்களில் கொரோனாவை விரட்டிவிடுவோம் என்று, எடப்பாடி பழனிசாமி அறிவித்தது போன்று, இன்னும் 10 நாட்களில் கொரோனா குறைந்துவிடும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


 சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ள 3 மண்டலங்களில் 10 நாட்களில் கொரோனா பரவல் குறைய வாய்ப்புள்ளது. வடசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருப்பதால் கொரோனா பரவலும் அதிகமாக இருக்கிறது. ராயபுரம், தண்டையார்பேட்டை திரு.வி.க நகர் ஆகிய மண்டங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. வடசென்னை பகுதிகளில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

முதியவர்கள் வெளியே செல்வதை தடுக்க இளைஞர்கள் அடங்கிய தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 மண்டலங்களில் முதியவர்கள் வெளியே செல்வதை தடுக்கவும், முதியவர்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வயதானவர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 500 சுகாதார ஆய்வாளர்கள், லேப் டெக்னீசியன்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். சென்னை மாநகராட்சி பணி செய்யும் 35,000 ஊழியர்களில் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மண்டல வாரியாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்பு உள்ள 3 மண்டலங்களில் கண்காணிப்புக்காக 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

வரும் நாட்களில் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தால்தான் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க முடியும். கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிலவற்றில் 28 நாட்களாக தொற்று கண்டறியப்படவில்லை. நோய் தொற்றை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் நிச்சயம் பலன் இருக்கும். கடந்த 28 நாட்களாக தொற்று பதிவாகாத இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து விடுவிக்கப்படும். எளிதில் தொற்று தாக்க வாய்புள்ள நபர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.