கோவையில் 2 பெண்களுக்கு கொரோனா? தனி வார்டில் தீவிர கண்காணிப்பு!

உறவினர்கள் வீட்டுக்கு சென்ற வினையால் கோவை சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு. இந்நிலையில், 2 பெண்களுக்கு கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்று அவர்களை கோவை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிசன் பகுதியை சேர்ந்தவர் கமலம் . எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்க்கும் இவருக்கு சுமார் 58 வயது இருக்கும். இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வால்பாறை திரும்பினார் கமலம்.

திடீரென நேற்று காலையில் கமலம் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர் கமலத்தின் உறவினர்கள் இணைந்து சிகிச்சைக்காக சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு கமலத்தை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சூழ்நிலையில், வால்பாறை மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக சந்தேகித்தனர்.

 இதையடுத்து கமலத்தை பாதுகாப்பு கவச உடை அணிவித்து சிறப்பு ஆம்புலன்சில் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆர்.ஆர். தியேட்டர் சாலையை சேர்ந்தவர் கோபால். இவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது மகள் மகாலட்சுமி அவர்கள் கடந்த வாரம் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு பொள்ளாச்சி திரும்பிய சூழ்நிலையில், மகாலட்சுமிக்கு திடீர் காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவருக்கு கொரோனா அறிகுறி இருக்கலாம் என்பதால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரிருக்கும் கொரோனா தொற்று காரணமாக அவரை சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவையில் இருவருக்கும் கொரோனா தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டதால் கமலம், மகாலட்சுமி ஆகியோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து தெரியவரும் என்று மருத்துவர்களின் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தினால் கோவை நகரம் மிகுந்த பரபரப்பில் உள்ளது.