குழாய் வழியாக குடம் குடமாக கொட்டிய சமையல் எண்ணெய்! குடிநீரை எதிர்பார்த்த பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி!

நிலத்தடி நீரில் சமையல் எண்ணெய் கலந்த சம்பவமானது திருவொற்றியூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவொற்றியூர் பகுதியில் திருச்சினாங்குப்பம் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு மீனவ குடும்பங்களுக்காக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகளை கட்டி தந்துள்ளது. அதன்படி 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் திருச்சினாங்குப்பத்தில் வசித்து வருகின்றனர். 

இந்த குடியிருப்புக்கு அருகே தனியார் எண்ணெய் நிறுவனமானது இயங்கி வருகிறது. அங்கு ராட்சத டேங்கர் லாரியின் மூலம் எண்ணெய் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. அந்த நிறுவனத்திலிருந்து கழிவாக வரும் எண்ணெய் நிலத்தடி நீருடன் கலந்து விடுகிறது.

குடியிருப்புகளில் வாழும் மக்கள் மின்மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை எடுக்கும்போது அதில் சமையல் எண்ணெயானது கலந்திருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தண்ணீரை பயன்படுத்துவதனால் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், சரும நோய்கள் ஏற்படுவதாகவும் மக்கள் குறை கூறுகின்றனர். இந்த பிரச்சனையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.

அவர்கள் சம்பவயிடத்தை சோதித்து பார்த்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்த சம்பவமானது திருவொற்றியூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.