கன்னியாகுமரி! பொன்னாருக்கு எதிராக காங்கிரஸ் களம் இறக்கும் பெரும் தொழில் அதிபர்!

கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சென்னையை சேர்ந்த பெரும் தொழில் அதிபரை களம் இறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.


கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கிய தி.மு.க, கன்னியாகுமரியில் போட்டியிட்டது. தி.மு.க சார்பில் ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்று எம்.பி ஆனார். ஆனால் இந்த முறை கன்னியாகுமரி தொகுதியை காங்கிரசுக்கு கொடுத்துவிட தி.மு.க முடிவு செய்துள்ளது.

இதற்கு பதிலாக நெல்லை தொகுதியில் தி.மு.க வேட்பாளரை களம் இறக்க உள்ளது. கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை அங்கு முழுக்க முழுக்க மதம் சார்ந்த களம் நிலவரம் தற்போது உள்ளது. எனவே அந்த விவகாரத்திற்குள் சென்று சிக்கிக் கொள்ள தி.மு.க விரும்பவில்லை.

இதனால் தான் கன்னியாகுமரியை காங்கிரசிடம் தள்ளிவிட தி.மு.க முடிவெடுத்துள்ளது. அதே சமயம் கன்னியாகுமரியை பொறுத்தவரை பா.ஜ.க வேட்பாளர் தற்போதைய எம்.பியும் அமைச்சருமான பொன்னார் தான்.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் தான் வேட்பாளர் மாற்றப்பட உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்கிய நிலையிலும் பொன்னாருக்கு டஃப் பைட் கொடுத்து அ.தி.மு.க வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்தவர் வசந்தகுமார். ஆனால் அவர் தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார்.

இருந்தாலும் கூட எம்.பியாகும் ஆசை வசந்தகுமாருக்கு உள்ளது. ஆனால் தற்போதைய தமிழக அரசியல் சூழலில் ஒரு எம்.எல்.ஏ பதவி என்பது கூட மிக முக்கியம் என்று காங்கிரஸ் கருதுகிறது. எனவே கன்னியாகுமரியில் பொன்னாருக்கு எதிராக வசந்தகுமாரை காங்கிரஸ் நிச்சயமாக களம் இறக்கப்போவதில்லை.

அதே சமயம் பொன்னாருக்கு எதிராக வலுவான ஒரு வேட்பாளர் காங்கிரசுக்கு தேவைப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள ரூபி பில்டர்ஸ் நிறுவனர் மனோகரன் தான் காங்கிரசின் தேர்வு என்று சொல்கிறார்கள்.

சென்னை அருகே உள்ள தாம்பரத்தை சுற்றி உருவாகும் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்துமே ரூபி மனோகரன் கை வண்ணம் தான். வசந்தகுமாருக்கு நிகரான பணக்காரர். மேலும் அவரது குடும்பம் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே காங்கிரஸ் சார்பில் போட்டியிட கன்னியாகுமரி தொகுதியை ரூபி மனோகரன் கேட்டிருந்தார். ஆனால் வசந்தகுமாருக்கு அந்த தொகுதி கொடுக்கப்பட்டது. வசந்தகுமாரை போலவே ரூபி மனோகரனும் நாடார் தான்.

எனவே தான் அந்த தொகுதியில் ரூபி மனோகரனை களம் இறக்க தற்போதே காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூபி மனோகரும் கூட தேர்தல் பணிகளை துவக்கும் வகையில் கன்னியாகுமரியில் உள்ள கட்சிக்காரர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

கையில் பசை உள்ள பார்ட்டி என்பதால் காங்கிரஸ்கார்கள் மட்டும் அல்ல அங்குள்ள தி.மு.கவினர் கூட மனோகருக்கு காத்திருக்கிறார்கள். பொன்னார் பணம் செலவழிக்கமாட்டார் என்பதால் இந்த முறை ரூபி மனோகரனுக்கு தான் கன்னியாகுமரியில் வாய்ப்பும் என்றும் தற்போதே பேசிக் கொள்கிறார்கள்.