வர்ணனையாளர்கள் பட்டியலிலிருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கம்! பிசிசிஐ அதிரடி!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை வர்ணனையாளர்கள் பட்டியலில் இருந்து பிசிசிஐ நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆவார். இவர் கடந்த பல வருடமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக இருந்துவருகிறார். கடந்த உலக கோப்பை கிரிக்கெட்டின் போது வர்ணனையாளராக இருந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஒரு போட்டியின்போது ரவீந்திர ஜடேஜா மீது சர்ச்சைக்குரிய கருத்தை கூறி விமர்சித்தார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவும் அதிரடியாக பதில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் அந்த நேரத்தில் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரவீந்திர ஜடேஜா பற்றிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவர்களின் சர்ச்சைக்குரிய கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்ட இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளர் பட்டியலில் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் பெயர் இடம்பெறவில்லை. பிசிசிஐ இவரது பெயரை வர்ணனையாளர்கள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.