மட்டனுக்கு பதில் சிக்கன் குழம்பு! ஏற்க மறுத்து கல்யாண வீட்டை கலவர வீடாக்கிய உறவினர்கள்!

தெலுங்கானா மாநிலத்தில் கல்யாணவீட்டில் ஆட்டிறைச்சிக்கு பதில் கோழி இறைச்சி பரிமாறியதாக கூறி தகராறு செய்த இளைஞர்களால் வைபவம் வன்முறையில் முடிந்தது.


கல்யாணவீடு என்றால் கலாட்டாக்களுக்குப் பஞ்சம் இருப்பதில்லை. ஆனால் அவை இனிமையானவையாக இருக்கும் போதுதான் மகிழ்ச்சியில் சுவாரசியமும் கூடும் ஆனால் விவகாரமான ஒரு கலாட்டாவால் தெலுங்கானா மாநிலத்தில் ஒரு திருமண வீடு போர்க்களமாகியுள்ளது. 

பத்ராத்திரி கொத்தகூடம் என்ற மாவட்டத்தில் பிரவீன், அஜ்மீரா என்ற ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. தொடக்கத்தில் என்னவோ களிப்பும், கும்மாளமுமாக் எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. பின்னால் நடக்கப்போகும் பெரிய கலாட்டாக்களுக்கு அச்சாரமாக சிறுசிறு குறும்பு கலாட்டாக்களும் நடைபெறவும் செய்தன.

தாலி கட்டும் வைபவமும் சிறப்பாக முடிந்தது. திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் மனப்பூர்வமாக மணமக்களை வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து விருந்து பரிமாறப்பட்டது. அப்போது தொடங்கிய பிரச்சினைதான் இனிமையான தருணத்தை இன்னாத சூழலுக்குத் தள்ளியது. 

திருமணத்திற்கு வந்த மணமகன் வீட்டைச் சேர்ந்த சில இளைஞர்களில் சிலர் உற்சாக பானத்தின் ஆதிக்கத்தில் வெகு உற்சாகமாகவே இருந்தனர். அந்த போதையிலும் அவர்களுக்கு ஆட்டிறைச்சி பரிமாறப் படாமல் கோழி இறைச்சி பறிமாறப்படுவது தெரிந்தது.

அந்த நேரத்தில் அவர்களுக்கு இரு மனங்கள் இணைந்து தொடங்க இருக்கும் இனிய தாம்பத்தியத்தின் முக்கியத்துவத்தை விட சில நிமிடங்களில் வயிற்றுக்குள் சென்று வெளியேறப் போகும் இறைச்சி பிரச்சினைதான் முக்கியமானதாக இருந்தது 

விருந்தில், ஆட்டிறைச்சி ஏன் பரிமாறப்படவில்லை என அவர்கள் மணமகள் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போதிய வசதி இல்லாததால் ஆட்டிறைச்சிக்குப் பதில் கோழி இறைச்சி பறிமாறியதாக மணமகள் வீட்டாரிடம் இருந்து பதில் வந்தது.

அதற்கு இல்லை சமையல் கட்டில் இருந்து மட்டன் வாசம் வருகிறது. எங்களுக்கு மட்டனை கொடுக்காமல் சிக்கனை கொடுத்து ஏமாற்றுகிறீர்கள் என்று வாதம் செய்துள்ளனர். ஆனால் இல்லை சிக்கன் மட்டுமே உள்ளது, மட்டன் சமைக்கவில்லை என்று பெண் வீட்டார் பதில் அளித்துள்ளனர்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த அந்த இளைஞர்கள் தொடர் வீம்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண் வீட்டாரும் எவ்வளவுதான் பொறுப்பார்கள் இறுதியில் வாக்குவாதம் வலுத்து கைக்கலப்பானது. திடீரென சில இளைஞர்கள் உணவு பரிமாறுவதற்காக போடப்பட்டிருந்த பந்தலின் கட்டைகளை பிடுங்கியும்,  நாற்காலிகளை வீசியும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

திருமண வீடு போர்க்களமானது. தாக்குதலில் காயம் அடைந்த இரு வீட்டாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நலம் விரும்பிகளாக இருந்திருக்க வேண்டிய உறவினர்கள் நாதாரிகளாக இருந்ததால் இனிமையில் முடிந்திருக்க வேண்டிய திருமணம் வேதனையில் முடிந்தது.