சினிமாவில் தான் வில்லன்..! நிஜ வாழ்க்கையில்..! தேடிச் சென்று 250 ஏழைகளின் துயர் துடைக்கும் நடிகர்!

ஊரடங்கு உத்தரவால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.


கொரனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுள்ளது. அணுஆணுதங்களால் கூட வெல்ல முடியாத கண்ணுக்கு தெரியாத வைரஸ் உலக பொருளாதாரத்தையே ஆட்டிப் படைத்துள்ளது. ஊரடங்கு உத்தரவால் பல நாடுகள் பல லட்சம் கோடிகளை இழந்துள்ளன. கூலித்தொழிலாளர்கள் வேலை இல்லாமல் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பிரபல கார்பரேட் நிறுவனங்கள் முதல் நடிகர்கள் வரை தங்களால் முயன்ற நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவரும் நடிகர் சாய் தீனா தனது சொந்த செலவில் 250 குடும்பங்களுக்கு உதவி செய்து அசத்தி இருக்கிறார். சென்னையில் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள சுமார் 250 குடும்பங்களை தேர்ந்தெடுத்த நடிகர் சாய் தீனா எல்.எஃப்.இ. அமைப்பு மூலமாக 5 கிலோ அரிசி, 1 கிலோ கோதுமை மாவு, சாம்பார் பருப்பு ஆகிய பொருட்களை வழங்கி உள்ளார்.

இதற்காக அந்த குடும்பங்கள் சாய் தீனாவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்ததுடன் அவருக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சீரும் சிறப்பமாக வாழ வேண்டும் என வாழ்த்தினர். கோடிக்கணக்காக பணம் சம்பாதிக்கும் நடிகர்கள் கூட ஒரு பைசா கூட ஏழைகளுக்கு உதவி செய்யாமல் இருக்கும் இதே தமிழ்த் திரையுலகில் குறைந்த ஊதியம் கிடைத்தாலும் அதை ஏழைகளுக்கு உதவி உயர்ந்து நிற்கிறார் சாய் தீனா. அவரைப் பார்த்தேனும் மேலும் பலர் ஏழைகளுக்கு உதவி செய்ய முன்வருவார்கள் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.