டேவிட் வார்னரை பின்னுக்கு தள்ளி புதிய சரித்திரம் படைத்த கிறிஸ் கெய்ல்!

ஐ.பி.எல் தொடரில் அதிவேமாக 4000 ரன்களை கடந்த இரண்டாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார்.


ஐ.பி.எல் டி.20 தொடரின் 12வது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்து வருகிறது.

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கே.எல் ராகுல் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், பஞ்சாப் அணியின் மற்றொரு துவக்க வீரரான கிறிஸ் கெய்ல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இன்றைய போட்டியில் 6 ரன்கள் எடுத்த போது ஐ.பி.எல் அரங்கில் 4,000 ரன்னை எட்டிய கிறிஸ் கெய்ல், ஐ.பி.எல் தொடரில் 4000 ரனகளை கடந்த இரண்டாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இது தவிர, 4000 ரன்களை 113 இன்னிங்ஸில் கடந்த கிறிஸ் கெய்ல், 114 இன்னிங்ஸில் 4000 ரன்கள் கடந்திருந்த டேவிட் வார்னரின் சாதனையை பின்னுக்கு தள்ளி அதிகவேகமாக 4000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்துள்ளார்.