குழந்தையை தொடக்கூட இல்லை! மருத்துவர்கள் செயலால் பலியான குழந்தை சடலத்தை கட்டியணைத்து கதறிய தந்தை! மனதை ரணமாக்கும் சம்பவம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்க தாமதப்படுத்தியதால் பரிதாபமாக குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உத்திரப்பிரதேச மாநிலத்தில் கண்ணாஜ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் பிரேம்சந்த் மற்றும் ஆஷா தேவி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிக்கு ஒரு வயது மகன் இருந்துள்ளார். இந்த குழந்தைக்கு நேற்றைய தினம் திடீரென்று அதிக காய்ச்சலும் கழுத்து வீக்கமும் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை கண்ணாஜ் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்பொழுது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த குழந்தைக்கு சிகிச்சை வழங்க மறுத்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக அந்த குழந்தையை தொட்டுக் கூட பார்க்க அவர்கள் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த மருத்துவர்கள் 90 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கான்பூரில் அமைந்திருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் அவ்வளவு தூரம் அழைத்துச் செல்வதற்கு கையில் காசு இல்லாத சூழ்நிலையில் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் கெஞ்சி உள்ளனர். இருப்பினும் அந்த மருத்துவர்கள் சிகிச்சையை தாமதமாக ஆரம்பித்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

இதுகுறித்த அவரது பெற்றோரிடம் கேட்டபொழுது, நேற்று மாலை சுமார் 4: 15 மணி அளவிற்கு கண்ணாஜ் மருத்துவமனைக்கு எங்களுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தோம். அப்பொழுது எங்க குழந்தைக்கு அதிக காய்ச்சலும் கழுத்தில் வீக்கமும் இருந்தது. குழந்தையை பார்த்த மருத்துவர்கள் குழந்தையை தொட கூட முன்வரவில்லை. நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கான்பூரில் இருக்கும் பெரிய அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறி கொண்டே இருந்தனர். இதனையடுத்து சுமார் 4: 45 மணி அளவில் நாங்கள் எங்கள் குழந்தையோடு வெளியே அழுது கொண்டிருந்ததை பார்த்த நபர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய ஆரம்பித்தனர்.

இதனைப் பார்த்த மருத்துவர்கள் எங்கள் குழந்தைக்கு சிகிச்சை தர முன்வந்தனர். சிகிச்சை தருவதற்காக அழைத்துச் சென்று குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பிப்பதற்காக சென்றனர். ஆனால் குழந்தைகள் நல மருத்துவர் வந்து எங்களுடைய குழந்தையை பார்ப்பதற்கு முன்னரே எங்கள் குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது என்று கண்ணீரோடு கதறி அழுதிருக்கிறார். நாங்கள் எங்களுடைய குழந்தையை சுமார் 45 நிமிடங்கள்களாக அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக வைத்துக்கொண்டு போராடிக் கொண்டிருந்தோம். ஆனால் எந்த மருத்துவருமே எங்களுடைய குழந்தைக்கு மருத்துவம் பார்க்க முன்வரவில்லை. அவர்கள் ஒருவேளை நாங்கள் குழந்தையை கொண்டு சென்ற உடனே மருத்துவம் பார்த்திருந்தால் எங்கள் குழந்தை பிழைத்திருக்கும். மாறாக அவர்கள் தாமதப்படுத்தியதே எங்களுடைய குழந்தையின் உயிரிழப்பிற்கு காரணம் என்று கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.

மருத்துவர்களின் இந்த செயல் மிகவும் வேதனை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த தம்பதியினர் உயிரிழந்த தங்களது குழந்தையின் சடலத்தை கைகளில் வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது கண்களில் இருந்தும் கண்ணீர் வரவழைத்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.