காமராஜரின் கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

பெருந்தலைவர் காமராஜர் கனவு கண்ட காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி பெருமை சேர்த்துள்ளார்.


கால்வாய் வெட்டி நம்ம ஊருக்கு காவேரியை கொண்டுவரப் போகிறோம்; இனிமேல் தண்ணீர் பிரச்னையே இருக்காது” என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 4 மாதங்களுக்கு முன்னதாகவே தனது விறாலிமலை தொகுதி மக்களிடம் உற்சாகமாக பேசி வியப்பில் ஆழ்த்தினார். அமைச்சரின் இந்த பேச்சை கேட்ட பலரும் முதலில் ஆச்சரியத்துடன்தான் எதிர்கொண்டார்கள். காவேரியை திருச்சியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு கொண்டுவர முடியுமா? என்றும் மக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

விஜயபாஸ்கர் மக்களிடையே கூறிய அந்த திட்டம்தான் காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம். இது விவசாயிகளின் 100 ஆண்டு கனவு என்று கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி இன்று ரூ.6,941 கோடி மதிப்பில் காவேரி, தெற்கு வெள்ளாறு, வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கும், ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவேரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறார். 

வெள்ளக் காலங்களில் காவேரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் நூற்றாண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது என்று ஆளும் அதிமுக அரசு பெருமையாக கூறுகிறது.