சென்னை மவுண்ட் ரோடு புஹாரி ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா? வெளியான தகவலின் உண்மை பின்னணி!

சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல புஹாரி ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வெளியான தகவல் தவறு என்று தெரியவந்துள்ளது.


இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6535 ஆக இருந்தது. குறிப்பாக சென்னையில் இதுவரை  3325 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கடந்த ஒரு 10 நாட்களாகவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபல புஹாரி ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நேற்று தகவல் வெளியானது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நாட்களில் இருந்தே புஹாரி உணவகம் செயல்பட்டு வந்தது. அரசின் உத்தரவுப்படி ஹோட்டலில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புஹாரி உணவகத்தில் பார்சல் வாங்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த உணவகத்தில் பணிபுரியும் 19 வயதாகும் ஷெய்க் அடார்டி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால் இந்த தகவலை புஹாரி உணவகம் மறுத்துள்ளது. தங்கள் உணவகத்திற்கு அருகே வேலை செய்யும் வட மாநில இளைஞர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் அதனை அவர் குறிப்பிட்ட போது தவறுதலாக புஹாரி உணவக ஊழியருக்கு கொரோனா என அதிகாரிகள் புரிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தங்கள் உணவகத்திற்கு அதிகாரிகள் ஆய்வு செய்ததாகவும் அப்போது தங்கள் ஓட்டலில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானதாகவும் புஹாரி உணவகம் கூறியுள்ளது.