நவ பிருந்தாவனத்திற்கு செல்கிறீர்களா? இதையெல்லாம் கட்டாயம் கடைப்பிடிங்க!

நவ பிருந்தாவனங்களை நினைத்தாலும், துதித்தாலும் கூட நமது மனோபீஷ்டங்கள் பூர்த்தியாகும் எனும் போது நேரில் சென்று தொழுதால் அதன் பலன் அளவிடற்கரியதாய் இருக்கும்.


அப்படிப்பட்ட இடத்தை நாம் எவ்வளவு புனிதமாக, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதனால் தான் அங்கு சில விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்தக் காரணம் கொண்டும் ஸ்நானம் செய்யாமல் நவபிருந்தாவன வளாகத்தில் பிரவேசிக்கக் கூடாது.

ஆடவர்கள் ஸ்நானம் செய்து அவரவர்கள் மதாசாரப்படி நாமங்களைத் தரித்துக் கொண்டு தான் சொல்லவேண்டும். லுங்கி, பேண்ட் போன்றவற்றை அணிந்து கொண்டு செல்லக்கூடாது. சட்டை, பனியன் கழற்றி அங்கவஸ்திரம் மேல் துண்டுடன் செல்வது சாலச் சிறந்தது.

பெண்கள் குளித்தபின்பு தலைவாரி பின்னல் போட்டுக் கொண்டோ அல்லது வாரி முடிந்தோ செல்ல வேண்டும். தலை விரித்த நிலையில் உள்ளே செல்லக்கூடாது. நவ பிருந்தாவனத்தில் இருக்கும் ஒன்பது பிருந்தாவனங்களும் மூல பிருந்தாவனங்கள், ஜீவ பிருந்தாவனங்கள். ஆகையால் யாரும் அருகில் செல்லக்கூடாது. நவபிருந்தாவனங்களை தொட்டு வணங்கக் கூடாது.

நவ பிருந்தாவனங்களைச் சுற்றி ஒரு மஞ்சள் கோடு போடப்பட்டிருக்கும். அந்த எல்லைக் கோட்டைத் தாண்டாமல் தரிசித்து வலம் வந்தால் எல்லையில்லாத பலன் நிச்சயம் கிடைக்கும். எல்லைக் கோட்டைத் தாண்டிச் சென்றால், தாண்டிச் சென்று பிருந்தாவனங்களைத் தொட்டுத் தரிசித்தால் வேண்டாத தொல்லைகள் வந்து சேரும்.

நவ பிருந்தாவனத்தில் நினைத்த இடத்தில் நமஸ்கரிக்கலாகாது. அதற்கென அங்கே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விழுந்து வணங்க வேண்டும். நவ பிருந்தாவனத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வது சற்று சிரமம். உருளும் போது நம்மை அறியாமல் உருண்டோடி நமது அங்கம் ஏதேனும் பிருந்தாவனத்தின் மீது பட்டு விடக்கூடிய அபாயம் இருக்கிறது.

அவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டிருந்தால் உடன் இருவரை வைத்துக் கொண்டு உடல் வலம் வரலாம். பெண்கள் கட்டாயம் உடல் வலம் செய்ய அங்கு அனுமதி இல்லை. நவ பிருந்தாவனம் பரம பவித்ரமான இடம். அவ்விடத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதோடு புனிதம் கெடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.