பிச்சைக்காரன் வேடமிட்டு வேட்பு மனுவை தாக்கல் செய்த வேட்பாளர்..! புதுவிதமான விழிப்புணர்வு..!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்த வந்த வேட்பாளர் பிச்சைக்காரர் வேடமிட்டு அந்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்த மாதம் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக முனி ஆறுமுகம் என்பவர் பிச்சைக்காரன் வேடமிட்டு வேட்புமனு தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எச்சனஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக முனி ஆறுமுகம் பிச்சைக்கார வேடத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்ட அவர், நல்லம்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து வேட்புமனு தாக்கல் செய்ய இடம் வரை பிச்சைக்காரர்கள் போன்று வேடமிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பிச்சைக்காரன் என்பதை முழுமையாக வெளிக்காட்ட கையில் திருவோடு ஏந்தி வந்தார்.

மேலும் அங்கிருந்த மக்களிடம் பிச்சையாக பெற்ற பணத்தை பயன்படுத்திக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தலில் மக்கள் ஓட்டுக்காக பணம் பெற கூடாது என்ற விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவே தான் பிச்சையாக மக்களிடம் பணம் பெற்றதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.