இரவு நேரத்தில் தண்ணீர் பந்தலில் இருந்து போலீஸ்காரர்கள் இருவர் டம்ளரை திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் இணையதளத்தில் பரவி வருகின்றன.
சரக்கடிக்கும் அவசரம்! இலவச தண்ணீர் பந்தலில் போலீஸ் செய்த தகாத செயல்! வைரல் சிசிடிவி!

கோடை காலம் என்பதால் பல்வேறு இடங்களில் புண்ணியம் கருதி தண்ணீர் பந்தல்களையும் மோர் பந்தல்களையும் பலர் வைத்துள்ளனர். கடும் வெயிலில் இளைப்பாறுதலுக்கான இடமாக உள்ள தண்ணீர்ப் பந்தல்களால் கடந்து செல்லும் பலரும் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேற்பனைக் காடுபேட்டை என்ற இடத்தில் உள்ள ஒரு தண்ணீர் பந்தலில் இரவு நேரத்தில் நடந்த சம்பவங்கள் அங்கு உள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளன.
தண்ணீர் பந்தலில் மண்பானையும், அதன் மீது பிளாஸ்டிக் டம்ளரும் வைக்கப்பட்டிருந்தன. இரவு நேரத்தில் அங்கு ரோந்து பணிகாக வந்த இரண்டு போலீஸார், வண்டியை நிறுத்துகின்றனர். சி.சி.டி.வி. காட்சிகளை பார்ப்பவர்கள், போலீசார் தண்ணீர் குடிக்கத் தான் இறங்குகின்றனர் எனக் கருதும் நிலையில் அங்கு நடக்கும் நிகழ்வு வேறாக உள்ளது.
ஒரு போலீஸ்காரர் மட்டும் தண்ணீர் பந்தலுக்குச் சென்று பானை மீது இருந்த டம்ளரை எடுத்துக்கொண்டு வர அவர்கள் இருவரும் புறப்பட்டுச் செல்கின்றனர். இந்தக் காட்சிகளை பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர் .
அவர்கள் மது அருந்தவோ அல்லது வேறு காரணங்களுக்கோ எடுத்துச் சென்றிருக்கக் கூடும். ஆனால் தண்ணீர் பந்தல் வைக்க வக்கில்லாவிட்டாலும் பிறர் நன்மைக்காக அடுத்தவர் வைத்த தண்ணீர் பந்தலில் போலீசாரின் திருட்டு கேலிப் பொருளாகியிருக்கிறது.