இந்திய அரசிடம் மதிப்பில்லை, ஆனால், ரகுராம் ராஜனுக்கு சர்வதேச மரியாதை..!

உலகம் முழுதும் லாக்-டவுன் பாதிப்பினால் அத்தியாவசியப் பொருட்கள் தவிர வேறு பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.


ஆங்காங்கே வேலையிழப்புகள் உருவாகி நடுத்தர மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் பொருளாதார சீரழிவைச் சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகளுக்கு தேவையான நிதி உதவி மற்றும் சீர்குலைந்து போயுள்ள பொருளாதாரத்தை மறுசீரமைப்பது குறித்து ஆலோசனை வழங்கும் ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை குழுவின் உறுப்பினராக இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரகுராம் ராஜன் தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போதைய சூழலில் உலகம் எதிர்கொண்டு சிக்கலான பொருளாதார மந்தநிலை சிக்கல்களை களைய இந்த குழு தகுந்த ஆலோசனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ஐ.எம்.எப். அமைப்பிற்கு பல்வேறு ஆலோசனை வழங்குவதற்காக 11 பேர் கொண்ட குழுவை ஐ.எம்.எப்., அமைப்பின் தலைவர் கிறிஸ்டியனா ஜார்ஜிவா நியமித்துள்ளார்.

இதற்கு முன்னர் 2003 முதல் 2007 ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக ரகுராம் ராஜன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.