போட்டாச்சு பூஜை! 70 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் துவங்கியது பேருந்து போக்குவரத்து! பஸ்ஸில் யாரெல்லாம் பயணிக்கலாம்?

தமிழகத்தில் 70 நாட்களுக்கு பிறகு இன்று பேருந்து போக்குவரத்து துவங்கிய நிலையில், காலையிலேயே பேருந்துகளுக்கு பூஜை போடப்பட்டு ஓட்டுனர்கள் மற்றும் கன்டக்டர்கள் பயபக்தியுடன் புறப்பட்டனர்.


தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் நேற்று வரை பொதுப்போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால்தமிழகத்தில் சுமார் 70 நாட்களாக பேருந்துகள் ஓடவில்லை. இந்த நிலையில் 5வது கட்ட ஊரடங்கு துவங்கிய நிலையில் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் பொதுப்போக்குவரத்திற்கான தடை நீடிக்கிறது. இதனால் இந்த 3 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இன்று காலை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் (3மாவட்டங்கள் நீங்கலாக) பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

முன்னதாக 70 நாட்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் பேருந்துகளுக்கு முன்பு டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பூஜை போட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் பேருந்துகளை இயக்க ஆரம்பித்தனர். பேருந்துகளில் 60 பேர் மட்டுமே அனுமதி. பேருந்தில் நின்று கொண்டு செல்ல அனுமதி இல்லை. 

பேருந்தில் பயணிக்கும் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறி உள்ளவர்கள், இருமல், தும்மல் உள்ளவர்கள் பேருந்துகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல் கொரோனா நோயாளிகள் உள்ள தடை செய்யப்பட்ட பகுதி மக்களும் பேருந்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வயதானவர்கள் மற்றும் குழந்தைகளும் பேருந்து பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மற்ற அனைவரும் பேருந்தில் செல்ல அனுமதி உண்டு. இருப்பினும் சுய கட்டுப்பாட்டுன் மக்கள் பேருந்து போக்குவரத்தை துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.