60 பயணிகளை காப்பாற்றிய பேரூந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவமானது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 பக்கமும் கரைபுரண்ட ஆறு! நடுவே பாலத்தில் 60 பயணிகளுடன் பஸ்! திடீரென நெஞ்சு வலி! உயிரை பிடித்துக் கொண்டு டிரைவர் செய்த நெகிழ்ச்சி செயல்! திருச்சி பரிதாபம்!

திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடிக்கு அருகே பூவளூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு திருக்குமரன் என்ற பேருந்து ஓட்டுநர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலையில் வேலைக்கு சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார்.
திண்ணியம் கிராமத்தில் இருந்து பேருந்தை இயக்கியவர் லால்குடி வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். திருச்சி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மலைக்கோட்டை பகுதியே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தீபாவளி சமயம் என்பதால் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அவ்வாறுதான் திருக்குமரன் ஏற்றிச்சென்ற பேருந்திலும் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. சிறுமயம்குடி ஆற்றுப்பாலத்தை கடக்க வேண்டி இருந்தது. அது மிகவும் ஆபத்தான பாலமாகும். இருபுறமும் ஆறு சூழ்ந்திருக்கும். ஓட்டுநர் கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்தாலும் பேராபத்து நேரிடும். முன்னர் நிகழ்ந்த விபத்துக்களை உதாரணமாக எடுத்து கொள்ளலாம்.
இந்நிலையில் மிகவும் ஜாக்கிரதையாக திருக்குமரன் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலியால் துடித்து கொண்டிருந்தாலும் கவனத்துடன் பேருந்தை இயக்கி ஆற்றுப்பாலத்தை கடந்தார். பின்னர் சாலையோரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு, ஸ்டீயரிங் வீல் மீது மயங்கி விழுந்தார்.
உடனடியாக நடத்தி வரும் பேருந்து பயணிகளும் அவரை அவசர அவசரமாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக சத்திரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த திருக்குமரனின் மகள்கள், மகன்கள் கதறி அழுதனர். "எல்லோரையும் காப்பாத்திட்டு எங்களை தவிக்க விட்டீர்களே" என்று அவர்கள் கதறி அழுதுள்ளனர்.
இந்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.