மணப்பெண் டெல்லியில்..! மணமகன் மும்பையில்..! ஆனாலும் நடந்து முடிந்த திருமணம்..! எப்படி தெரியுமா?

மும்பை: கொரோனா ஊரடங்கு காரணமாக, காதலித்த பெண்ணை ஆன்லைன் மூலமாகவே இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக, திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள், காதல் ஜோடிகள் இந்த ஊரடங்கால் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.  இந்நிலையில், மும்பையை சேர்ந்த ப்ரீத் சிங் ஒரு திருமண புரட்சியை சாதித்துக் காட்டியுள்ளார்.  ஆம், இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக, ஆன்லைனில் டெல்லியை சேர்ந்த நீத் கவுர் என்பவருடன் பழக தொடங்கினார்.நாளடைவில் இது காதலாக மாற, இருவரும்  திருமணம் செய்ய தீர்மானித்தனர்.

இவர்களின் காதல் திருமணத்திற்கு, இருவீட்டாரும் பச்சைக் கொடி காட்டியுள்ளனர். இதன்படி, 2020 ஏப்ரல் 4ம் தேதி திருமணம் செய்வதாக  நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராவிதமாக கொரோனா அச்சத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கவே, வேறு வழியின்றி காதல் ஜோடி  புதுவித ஐடியாவை செயல்படுத்தியுள்ளனர்.  இதன்படி, ப்ரீத் சிங் அவரது வீட்டில் மாப்பிள்ளை கோலத்தில் அமர, நீத் கவுர் அவரது வீட்டில் இருந்தபடியே மணப்பெண் கோலத்தில் அமர, உறவினர்கள், நண்பர்கள்  இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆசிர்வாதம் செய்ய, வீடியோ கால் மூலமாக திருமணம் இனிதே நடைபெற்றது.

இதுபற்றி மாப்பிள்ளை ப்ரீத் சிங் கூறுகையில்,  ''பிரமாண்டமான முறையில் எங்கள் திருமணத்தை நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஊரடங்கு காரணமாக, இப்படி எளிதாக நடந்து முடிந்துள்ளது. எனினும், ஊரடங்கு முடிந்த பின்  நாங்கள் குருத்வாரா சென்று சீக்கிய முறைப்படி திருமணம் செய்துகொள்வோம்,'' என்றார்.  ஆன்லைனிலேயே நடைபெற்ற இந்த திருமணம் வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.