நான்காம் பிறை பார்த்தால் நாய் படாத பாடு என்பது உண்மையா? ஏன் அப்படி சொல்கிறார்கள்?

அமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.


செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும்.

குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் இப்பிறையைக் கண்டால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.

கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையைக் கண்டால் சகல பாவங்களும் தொலையும்.

மூன்றாம் பிறை உருவான கதை :

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர்.  சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாகஅமரும் பேறுபெற்றார்.

சுறுசுறுப்போடு  அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.

மூன்றாம் பிறையை தாராளமாக பார்க்கலாம். இதையே "சந்திரதரிசனம்' என்பர். இதனால், செல்வவளம் பெருகும் என்பர். சிவன் மூன்றாம்பிறையைத் தன் தலையில் சூடிக் கொண்டிருப்பதை சுந்தரர், "பித்தா பிறைசூடி' என்றே சுந்தரர் தேவாரத்தில் போற்றுகிறார்.

நான்காம் பிறையைத்தான்(சதுர்த்தி திதியன்று) பார்க்கக்கூடாது. ஒருவேளை அன்று கண்ணில் சந்திரன் பட்டு விட்டாலும், விநாயகரை வணங்கி விட்டால் தோஷம் நீங்கிவிடும்.

ஒரு முறை விநாயகப் பெருமான் சந்திரலோகத்துக்கு விஜயம் செய்தார். கையில் கொழுக்கட்டையுடன் வந்திருந்த விநாயகரைக் கண்டு ஏளனம் செய்த சந்திரன் மீது விநாயகர் மிகுந்த கோபம் அடைந்தார். அன்று பிள்ளையார் சதுர்த்தி வேறு. கோபமுற்ற கணபதி, ‘சதுர்த்தியில் உன்னைப் பார்ப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாவார்கள்!’ என்று சபித்தார். மனம் வருந்திய சந்திரனோ, தான் அறியாது செய்த தவற்றை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டுக்கொண்டான். விநாயகர் சந்திரனை மன்னித்தார்,

சதுர்த்தி நாளில் என்னை அவமதித்தித்ததால் உனக்கு இந்த சாபம் ஏற்பட்டது. இனிமேல் சதுர்த்தியில் உன்னைப் பார்க்கும் அனைவருக்கும் நீ கேடுகளை விளைவிப்பாய்.” என்றும் சாபம் அளித்தார். ஆனால், மூன்றாம்பிறையைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் முழு மகிழ்ச்சி பொங்கும் என்று அருளினார்.

சதுர்த்தி என்பது வளர்பிறை நாளின் நான்காவது நாள். விநாயகரை சந்திரன் அவமதித்த நாளும் சதுர்த்திதான். அன்று அவர் விநாயகரின் சாபத்தைப் பெறும் நிலை ஏற்பட்டது. அதனால், நான்காம் பிறை நாளில், அதாவது சதுர்த்தி அன்று யாராவது நிலாவைப் பார்த்தால் அவர்களுக்கு பிரச்னைகள் வரும் என்று சொல்கிறார்கள். ‘நான்காம் பிறையைப் பார்த்தால் நாய் படாத பாடு என்று சொல்வதையும் கேட்டிருப்போம். அதுவும் இதனால்தான்.