பாண்டேவுக்கு தயாராகும் முன்னணி செய்தி சேனல்! உதவிக்கரம் நீட்டும் பா.ஜ.க!

தந்தி டிவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ரங்கராஜ் பாண்டேவுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்து வேறு ஒரு முன்னணி சேனலில் வேலைக்கு சேர்த்துவிடும் பணியை பா.ஜ.க தீவிரமாக செய்து வருகிறது.


தந்தி டிவி நிர்வாகத்துக்கும் – பா.ஜ.கவுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து கடந்த 6 வருடங்களாக செயல்பட்டு வந்தவர் பாண்டே. தந்தி டிவியில் பாண்டேவுக்கு பிரச்சனை வந்த போதெல்லாம் பஞ்சாயத்து பேசி தீர்த்து வைத்தவர்கள் பா.ஜ.க பின்புலம் கொண்டவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள். இவர்கள் உடன் இருக்கும் தைரியத்தில் தான் தந்தி டிவி உரிமையாளரின் சொல்லை கூட பாண்டே ஓரிரு முறை மீறியுள்ளார்.

   பொறுத்து பொறுத்து பார்த்த தந்தி டிவி உரிமையாளர் பாலசுப்ரமணிய ஆதித்தன் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து தான் பாண்டேவை வேலையை விட்டு தூக்கியுள்ளார். ஆனால் பாண்டேவோ தந்தி டிவியில் இருந்து தான் விலகிவிட்டதாக தகவல்களை பரப்பி வருகிறார். உண்மையில் வேலையில் இருந்து விலகுவதாக இருந்தால் நோட்டீஸ் பீரியட் கொடுத்து தான் விலகுவார்கள்.

   ஆனால் திடீரென ஒரு நாள் தான் தந்தி டிவியில் இருந்து அயற்சி காரணமாக விலகிவிட்டதாக பாண்டே கூறுவதை விவரம் அறிந்தவர்கள் நம்ப தயாராக இல்லை. இதனிடையே தந்தி டிவியில் இருந்து பாண்டே விலகியது மத்தியில் மிக முக்கிய இலாக்காவை கவனித்து வரும் பெண் மத்திய அமைச்சர் ஒருவருக்கு தான் பெரிய இழப்பாக கருதப்படுகிறது. தமிழகத்திற்கு அந்த பெண் மத்திய அமைச்சர் எப்போது வந்தாலும் அவருடன் ஒரு தந்தி டிவி செய்தியாளர் இருப்பார்.



   அந்த பெண் மத்திய அமைச்சர் செல்லும் இடங்கள் எல்லாம் தந்தி டிவியில் செய்தியாக்கப்படும். அந்த அளவிற்கு பாண்டேவுடன் அந்த மத்திய அமைச்சர் நல்லுறவை பேணி வந்தார். மேலும் தனது எதிர்கால அரசியல் தமிழகத்தில் இருந்து தான் என்று தீர்மானித்து வைத்திருந்த அந்த அமைச்சருக்கு பாண்டேவின் பணி நீக்கம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பல முறை முயன்றும் பாண்டேவை மீண்டும் தந்தி டிவிக்குள் கொண்டு செல்ல முடியவில்லை.

   இதனால் தமிழகத்தில் உள்ள இரண்டு முன்னணி செய்தி சேனல்களின் உரிமையாளர்களிடம் பாண்டேவுக்காக அந்த பெண் மத்திய அமைச்சர் பேசியதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வரை பாண்டேவை பணியில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அந்த அமைச்சர் கேட்டும், ஒரு சேனலின் உரிமையாளர் தங்களிடம் ஏற்கனவே செய்தி ஆசிரியர் இருப்பதால் பாண்டேவை அனுமதிப்பது கடினம் என்று பதில் அளித்துள்ளார்.

   மற்றொரு மிக முக்கிய தொலைக்காட்சியின் உரிமையாளரோ எங்கள் தொலைக்காட்சியில் செய்திக்கு தான் முக்கியத்துவம் தனி நபர்களுக்கு இல்லை, அதனால் பாண்டேவால் இங்கு வேலை பார்க்க முடியாது என்று நாசூக்காக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டாம் நிலையில் உள்ள சில சேனல்களை பாண்டேவுக்காக பா.ஜ.க அனுதாபிகள் சிலர் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.



   இதில் உடன்பாடு எட்டப்பட்டால் விரைவில் பாண்டேவை வேறு ஒரு தொலைக்காட்சியில் பார்க்கலாம். இதனிடையே பாண்டேவுக்காக தனியாக தொலைக்காட்சியை தொடங்கும் யோசனையை பா.ஜ.க மேலிடம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.