சட்டப்பேரவையில் குப்பை அள்ளும் வேலை! போட்டா போட்டியில் எம்இ,எம்டெக் பட்டதாரிகள்!

தமிழக தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கு பி.இ., பி.டெக். எம்.டெக். எம.இ. போன்ற உயர்கல்வி படித்தவர்களும் விண்ணப்பித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


எந்த வேலையாக இருந்தாலும் சரி, அரசு வேலையாக இருந்தால் போதும். நிரந்தர வருமானம், ஓய்வூதியம் என பணப்பலன்கள் அனைத்தும் முறையாக கிடைத்துவிடும். 

சமுதாயத்தில் கல்வித் தகுதியின் அடிப்படையில்தான் வேலைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. துப்புரவு பணியை பொறுத்தவரை படிப்பறிவு தேவை இல்லை என்பதால் ஆரோக்கியமாக இருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 10 பெருக்குபவர் பணியிடமும் 4 துப்புரவு பணியாளர் பணியிடமும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

துப்புரவு பணிக்கு அதிகபட்ச சம்பளம் 50,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டதால் அரசு வேலை கிடைத்தால் போதும் என்ற ஆர்வத்தில் உயர்கல்வி படித்தவர்கள் உள்பட 4,607 பேர் துப்புரவு பணி செய்யத் தயார் என விண்ணப்பித்திருந்தனர். அதில் 3,930 மனுக்கள் மட்டுமே ஏற்க்கு கொள்ளப்பட்டன.

நாள் ஒன்றுக்கு 100 பேரிடம் நேர்காணல் நடத்திவரும் நிலையில் தமிழகத்தில் கல்வித் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு இல்லாததால்தான் வேறு வழியின்றி இந்த பணியை தேர்ந்தெடுத்ததாக பலர் தெரிவிக்கின்றனர். தனியார் நிறுவனங்களில் போதுமான வருவாய் இல்லாத காரணத்தால் ஆட்குறைப்பு நடவடிக்கை, கட்டாய விடுப்பு உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.

ஆனால் முதலில் துப்புரவுப் பணிக்கு சேர்ந்துவிட்டு தங்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் அதற்கான தேர்வு எழுதிவிட்டு பதவி உயர்வு பெற்று சென்றுவிடுவார்கள் என சிலர் தெரிவிக்கின்றனர்.