லண்டனில் நடைபெற்ற பாஃப்டா விருதுகள் வழங்கும் விழாவில், ஏழு விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது 1917 திரைப்படம்.
பாஃப்டா விருதுகளை அள்ளிய 1917. என்ன கதை தெரியுமா?

சிறந்த திரைப்படம், ஒளிப்பதிவு உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. இத்தனை விருதுகள் அள்ளும் வகையில் 1917ல் என்ன கதை இருக்கிறது? இதோ பூ.கொ.சரவணன் 1917 பற்றி எழுதியிருக்கும் அற்புத பதிவு. 1917 திரைப்படம் முதலாம் போரைப்பற்றிய படம் என்று குறுக்கிவிட முடியாது.
போர் என்பது ரத்தத்தைச் சூடேற்றுகிற ஒன்றாகவே பல சமயங்களில் தற்கால உரையாடல்களில் பதிந்திருக்கிறது. போர்க்களத்துக்கே 1917 னுடைய காட்சிகள் நம்மைப் பதைபதைப்போடு போர்க்கள புதைகுழிகள், இருளடர்ந்த பாதைகள், குற்றுயிரோடு ரத்தச்சகதியில் மிதக்கும் வீரர்கள், நீண்டுகொண்டே போகும் மரணப்பாதை என நம்மை ஆட்கொள்கிறது.
எதற்காக அழைக்கப்படுகிறோம் என்பது அறியாத இரு ஆங்கிலேய வீரர்கள் ஜெர்மனியின் சதிவலையில் சிக்கி உயிரிழக்கப் போகும் 1600 வீரர்களைக் காக்க கந்தக நெடிமிகுந்த நிலப்பகுதியிலும், பிணங்கள் மிதக்கும் நதியிலும் பயணித்துக் காக்க முயல்வதே கதைக்களன். மீசை முறுக்கல்கள், தொடை தட்டும் வசனங்கள், தேசபக்தி வீரவுரைகள் இல்லாமல் சாம் மெண்டீஸின் இப்படைப்பு விரிகிறது.
எதிரி எனத் தேசபக்தி வரையறுத்துக் கொல்ல சொன்னவனிற்குத் தண்ணீர் ஈயும் மானுடம் ஒரு புறம் என்றால், கண்ணிமைப்பதற்குள் கொன்று போடவேண்டிய கொலைச்சமர் இன்னொரு புறம். ஒரே டேக்கில் எடுக்கப்பட்டதைப் போன்ற மயக்கத்தை ரோஜர் டீக்கின்ஸின் ஒளிப்பதிவும், லீ ஸ்மித்தின் படத்தொகுப்பும் தோற்றுவிக்கின்றன. செர்ரி மரங்கள் பூத்துக்குலுங்கும் போது வெட்டுண்டு வீழ்ந்து கிடக்கின்றன.
அவ்வளவு தானா எனக் கேட்கும் நண்பனிடம், 'கற்பாறைகள் அழுகிய பின் மீண்டும் செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கியே தீரும்' என்கிறான் படைவீரன். பசி குலையை அரித்து உண்கையிலும் பால்மணம் மாறா பிஞ்சைப் பற்றும் விரல்கள் நம் கன்னம் வருடுகின்றன. வீடியோ கேம் வீரர்களைப் போல அல்லாமல் உணர்வும், உயிர்பயமும், ஓலமும் ஒன்றுசேர போர்வெறி காவுகேட்கும் மனிதர்களின் கண்கள் இறைஞ்சுகின்றன.
வயிற்றுப்பசி கண்ணுக்கு தெரியாத இழைபோலப் படம் முழுக்கப் போர்வெறியை நையாண்டி செய்வதைப்போலக் குரூரமாய் உலா வருகிறது. அது மானுட உள்ளொளியை ஒளிரவும் வைக்கிறது. 'நாளைக்கு என்னாகுமோ' எனத்தெரியாத வாழ்க்கையின் ஊடாக முகந்திருப்பிக் கொண்ட உறவுகளின் நினைவுகள் கலங்க வைக்கின்றன. அழுக்கிலும், அழுகையிலும் தோய்ந்து போன புகைப்படங்களின் பிரிவு கரிக்கிறது. இன்றோடு போர் முடிந்து பேரமைதி திரும்பும் எனும் தொனியில் கசியும் அந்தக் கானத்தின் ஏக்கம் என்னென்னவோ செய்கிறது.