புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார்.
புனர் வாழ்வு மலரச் செய்யும் ஐம்புலியூர் திருத்தலங்கள் – புலிக்கால் முனிவர் ஈசனை வழிபட்ட திருத்தலங்கள்

அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார்.
இந்த வியாக்ரபாத மகரிஷி, ஈசனை வழிபட்ட திருத்தலங்கள் புலியூர் கோட்டங்கள் அல்லது ஐம்புலியூர் என்று அழைக்கப்படுகின்றன.
இவற்றில் முதலில் வருவது சிதம்பரம் பெரும்பற்றப்புலியூர். இங்கே இறைவன் மூலட்டானேஸ்வரர், இறைவி சிவகாம சுந்தரி. பெரும்பற்றப்புலியூர் கல்வெட்டில் குறிக்கப்பட்டு உள்ள, 'பெரும்பற்றப்புலியூர்' என்பது சிதம்பரத்தின் பழைய பெயர். 'மூலப்பருடையார்' என்ற பெயர், இறைவன் தில்லை மூலட்டானத்து (ஆதி மூலநாதர்) சுவாமியை குறிப்பதாக உள்ளது.
இரண்டாவது பெரும்புலியூர் என்னும் திருப்பெரும்புலியூர். இறைவன் வியாக்ரபுரீஸ்வரர், இறைவி சௌந்தர்யநாயகி அம்மன். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நான்கு அடுக்குகளால் ஆன தாமரை மலரின் மேல் சுவாமி மூலஸ்தானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதி கருங்கல்லாலும் மேற்பகுதி சுதையாலும் ஆனது.
மூன்றாவது தலம் திருப்பாதிரிப்புலியூர் என்னும் கடலூர். இறைவன் ஸ்ரீ பாடலீஸ்வரர், இறைவி அருந்தவ நாயகி அம்மன். எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை இறைவியின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும். ஆனால் பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
நான்காவதாக ஓமாம்புலியூர். இறைவன் துயர்தீர்த்தநாதர், இறைவி புஷ்பலலிதாம்பிகை. இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்தத் தலம். ஓமம் - வேள்வி, வேள்விச்சிறப்புடைய ஊர். பிரணவப் பொருளுபதேசம் நடந்த தலமாதலின் ஓம்-ஆம்-புலியூர் = ஓமாம்புலியூர் என்றாயிற்று என்று கூறுவர்.
ஐந்தாவது தலம்தான் எருக்கத்தம்புலியூர் எனும் ராஜேந்திரபட்டினம். இறைவன் நீலகண்டேஸ்வரர். இறைவி நீலமலர்க்கன்னி அம்பிகை.. ராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும், அவனுடைய மகன் ராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
இத்தலத்தின் பெருமையை கேட்ட தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பறவையாகவும், மரங்களாகவும் மாறி ஈசனை வழிபட்டு வந்தனர். அங்கே வந்த வேடர்கள் பறவைகளை கொல்லவும், மரங்களை வெட்டவும் முயன்றனர். தேவர்களும், முனிவர்களும் இறைவனிடம் முறையிட, அவர்களை யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி வழிபடும்படி கூறி மறைந்தார். அவ்வாறே அவர்கள் யாருக்கும் பயன்படாத வெள்ளெருக்கு மரங்களாக மாறி, இத்தலத்தில் இறைவனை வழிபட்டனர்.
அத்தம் என்பது காடு, எனவே எருக்கத்தம் என்பது எருக்கங்காடாகும். எருக்கஞ் செடிகள் நெருக்கமாக நிறைந்திருந்த காட்டில் எழுந்த ஊர் எருக்கத்தம்புலியூர் என்று அழைக்கப் பெற்றது. சிவபெருமானுக்கு இனிய வெள்ளெருக்கு இன்னும் அவ்வூர்க் கோவிலின் மூலஸ்தானத்தருகே தல விருட்சமாக விளங்குகின்றது
இந்தத் தலங்களை வழிபடுவதால் குழந்தைகள் இனிய சுபாவத்துடன் திகழ்வார்கள். இந்த 5 தலங்களையும் ஒரே நாளில் வழிபடுவதால் குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். கணவர் தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவார். புலியூர் சிவத் தலங்களை தரிசிக்க புனர் வாழ்வு மலரும்.