இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகள் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலி! இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை!

தென்ஆப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெற உள்ள அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளும் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிவருகிறது. மைதானத்தில் மக்கள் கூட்டம் கூடினால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு போட்டிகளில் விளையாடும் வீரர்கள் மட்டும் களத்தில் இருந்தால் போதும். மைதானத்தில் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என்ற மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பிசிசிஐ மைதானத்தில் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளது.
இதனால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள அடுத்த 2 ஒருநாள் போட்டிகளும் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் காரணமாக லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.