2 மாதங்கள் வீட்டு வாடகை வேண்டாம்..! வாடகைதாரர்களுக்கு கடிதம் அனுப்பிய இஸ்லாமிய முதியவர்! நாகூர் நெகிழ்ச்சி!

கொரோனா வைரசின் தாக்கம் உலகமெங்கும் அதி வேகமாக பரவிவரும் நிலையில் அரசாங்கம் பல்வேறு நிவாரண உதவிகளையும் சலுகைகளையும் மக்களுக்கு அளித்து வருகிறது.


இந்த வகையில் ஏ.டி.எம் குழுமத்தின் தலைவர் அவருக்கு சொந்தமான இடங்களில் வாடகை இருப்பவர்களிடம் இரண்டு மாதத்திற்கான வாடகை தொகையை செலுத்த வேண்டாம் என்று அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார். நாகூரில் உள்ள ஏ.டி.எம் டவர், ஏ.டி.எம் பேலஸ், ஏ.டி.எம் என்கிளேவ் ஆகியவற்றின் குழும தலைவர் டாக்டர். ஜனாப் ஏடிஎம் மெய்தீன் அவர்கள் அவருக்கு சொந்தமான குடியிருப்புகளில் வாடகைக்கு வசித்து வருபவர்களுக்கு ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார். 

அந்த அறிவிப்பில் தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார தடை காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு உண்டான வாடகை தொகையை இந்த குடியிருப்பில் வசித்து வரும் வாடகைதாரர்கள் கட்ட வேண்டாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் மே மாதத்திற்கு உண்டான வாடகையை ஜூன் மாதம் செலுத்தினால் மட்டும் போதும் எனவும் அவர் வாடகைதாரர்களுக்கு சலுகை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த மனிதாபிமானம் நிறைந்த அறிவிப்பு அங்கு வாடகை வீட்டில் வசித்து வருபவர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.