சென்னை போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன் விரைவில் மாற்றம்! ஏன் தெரியுமா? அடுத்த கமிஷ்னர் யார் தெரியுமா?

சென்னை மாநகர கமிஷ்னராக கடந்த 3 ஆண்டுகளாக பதவி வகித்து வரும் ஏ.கே.விஸ்வநாதன் விரைவில் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை காவல்துறை கமிஷ்னராக எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டவர் ஏ.கே.விஸ்வநாதன். அப்போது முதல் தற்போது வரை பெரிய அளவில் சர்ச்சைகள் எதிலும் சிக்காமல் சிறப்பாக பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் கூட விஸ்வநாதன் தன்னை சுற்றி எந்த சர்ச்சையும் இல்லாத வகையில் பார்த்துக் கொண்டார்.

அதே போல் சென்னை மாநகர காவல்துறையில் எண்ணற்ற சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் ஏ.கே.விஸ்வநாதன். சிறப்பாக செயல்படும் போலீசாரை அவர் சாதாரண காவலராக இருந்தாலும் சரி கூடுதல் ஆணையராக இருந்தாலும் சரி நேரடியாக சென்று பாராட்டுவது, தனது அலுவலகத்திற்கு அழைத்து வெகுமதி கொடுப்பது என புதிய பாதையை அமைத்தவர்.

மேலும் இவர் பணியில் இருந்த 3 ஆண்டுகளில் சென்னையில் அரங்கேறிய மிகப்பெரிய குற்றச்சம்பவங்களில் எல்லாம் விரைவில் துப்பு துலக்கப்பட்டது. மேலும் சென்னை மாநகரரை கிட்டத்தட்ட சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தவர் ஏ.கே.விஸ்வநாதன் தான். மூன்றாவது கண் எனும் திட்டத்தின் மூலம் பொதுமக்களுடன் இணைந்து வீதிக்கு வீதி சிசிடிவி கேமராக்கள் சென்னையில் அமைக்கப்பட்டன.

விஸ்வநாதனின் இந்த மூன்றாவது கண் திட்டத்தை முன்மாதிரியாக கொண்டு தமிழகம் எங்கும் பரவலாக சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடிந்தது. இந்த நிலையில் தான் சென்னை மாநகர ஆணையராக பதவிக்கு வந்து ஏ.கே.விஸ்வநாதன் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

பொதுவாக சென்னை மாநகர ஆணையர் போன்ற பதவிகளில் யாரையும் மூன்ற ஆண்டுகளுக்கு மேல் வைத்திருப்பது ஆட்சியாளர்களின் வழக்கம் அல்ல. அதே போல் சிறப்புற செயல்பட்டு வந்த ஏ.கே.விஸ்வநாதனுக்கு சென்னை காவல் ஆணையர் என்பதை விட உயர் பதவி காத்திருப்பதாக சொல்கிறார்கள்.

இதனால் கமிஷ்னர் பதவியில் இருந்து ஏ.கேவிஸ்வநாதன் விடுவிக்கப்பட்டு ஜெயந்த் முரளி ஐபிஎஸ் சென்னை கமிஷ்னராக விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.