அரவிந்த் கெஜ்ரிவால் கூறும் தேர்தல் ஆருடம்.

பா.ஜ.க.வுக்கு எத்தனை சீட் தெரியுமா?


சிறையில் இருந்து வெளியே வந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பா.ஜ.க.வை விரட்டி விரட்டி வெளுத்து வருகிறார். இந்த நிலையில் அவர் கைப்பட 2024 தேர்தலில் பா.ஜ.க.வுக்கும் இந்தியா கூட்டணிக்கும் எத்தனை சீட் வரும் என்று எழுதிக் கொடுத்திருப்பது வைரலாகிறது.

அவர் ஒரு சீட்டில், ’நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வரும் போது இந்தியா கூட்டணி 300க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் பாஜக 200 க்கு உட்பட்ட தொகுதிகளிலும் வெற்றி பெறும்’ என தனது கைப்பட எழுதி கையெழுத்துப் போட்டிருக்கிறார்.

அதேபோல், ‘தான் கடவுளால் அனுப்பப்பட்டவர்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதற்கும் கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார். சமீபத்தில் மோடி, "நான் ஒரு தாயின் மூலமாக பிறக்கவில்லை என்று தோன்றுகிறது. மாறாக, கடவுளால் அனுப்பப்பட்டதாக உணர்கிறேன்" எனக் கூறினார். கடவுளால் அனுப்பப்பட்டவருக்கு அரசியலில் என்ன வேலை என்று கேட்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஜூன் 1ம் தேதியுடன் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் முடிவுக்கு வருகிறது. இதனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ‘தன் உடல் எடை இயல்புக்கு மாறாக குறைந்துள்ளது, எனவே, மேலும் 7 நாட்கள் அவகாசம் வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஆனால், இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு செய்திருக்கிறது. இது குறித்து சிறப்பு நீதி மன்றத்தில் மனு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மீண்டும் சிறைக்குச் செல்வாரா, மீண்டும் ஜாமீன் கிடைக்குமா என்பது விரைவில் தெரியவரும்.