அருண் ஜேட்லியின் நிதி அமைச்சர் பதவி திடீர் பறிப்பு! பிரதமர் மோடி அதிரடி!

அருண் ஜேட்லியிடம் இருந்து மத்திய நிதி அமைச்சர் பதவியை பறித்து பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.


குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அருண் ஜேட்லி கவனித்து வந்த நிதித்துறை, கார்ப்பட்ரேட் நலத்துறை ஆகிய இலாக்காங்கள் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   அதே சமயம் பிரதமர் மோடி அறிவுறுத்தியதன் பேரில் இலாகா இல்லாத மத்திய அமைச்சராக ஜேட்லி நீடிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை கூறியுள்ளது. ஜேட்லியிடம் நிதி அமைச்சக பொறுப்புகள் வழங்கப்படும் வரை அந்த பொறுப்புகளை பியூஸ் கோயல் தற்காலிகமாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   தொடையில் ஏற்பட்டுள்ள புற்று நோய் காரணமாக அமைச்சர் அருண் ஜேட்லி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விரைவில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

   அமெரிக்காவில் இருந்து உடனடியாக ஜேட்லி திரும்பினாலும் கூட அவரால் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது என்று சொல்லப்படுகிறது. இதனால் தான் ஜேட்லியிடம் இருந்து நிதி அமைச்சக பொறுப்புகளை பறித்து மோடி கோயலிடம் ஒப்படைத்துள்ளார்.

   எனவே நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் பியுஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்காலிகமான ஏற்பாடு என்று கூறப்பட்டுள்ளது.