தொலைந்த பொருள் உடனே கிடைக்க அருளும் அரைக்காசு அம்மன்!

புதுக்கோட்டை மன்னர்களில் சிலர் திருக்கோகர்ணம் திருக்கோயிலில் உள்ள அன்னை பிரகதாம்பாளைக் குலதெய்வமாகவும், பலர் இஷ்ட தெய்வமாகவும் வணங்கிவந்தனர்.


புதுக்கோட்டை பிரகதாம்பாளுக்கு திருவிழா போன்ற விழாகள் எடுக்கும் போது, அம்மனை மகிழ்விப்பதற்காக அம்மன் உருவத்தை அரைக் காசில் பதித்து திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது. “புதுக்கோட்டை பிரகதாம்பாள்“ என்று இந்த அம்மனின் பெயரை சிலருக்கு உச்சரிக்க வராததால் நாளடையில் “அரைகாசு அம்மன்“ என்று அழைத்தார்கள்.

ஒருமுறை அரசர் ஒருவரின் உயர்ந்த பொருள் தொலைந்த போனது. அந்த பொருள் கிடைத்தே ஆக வேண்டும், இல்லை என்றால் பெரிய பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு இக்கட்டான நிலை அரசருக்கு உருவானது. இதனால் அரசர் பல இடங்களில் தேடியும், பல காவலர்கள் தேடியும் அவர்கள் தேடியது கிடைக்கவில்லை.

இச்சூழ்நிலையில், “அரைகாசு அம்மனுக்கு அரிசி, வெல்லம் பிரசாதமாக வைத்து வேண்டினால், நிச்சயம் நீங்கள் தொலைத்தது திரும்ப கிடைக்கும்.” என்றார் புதுக்கோட்டை பிரகதாம்பாள் ஆலயத்தில் இருந்த ஒருவர். அந்த நபர் கூறியதை தெய்வத்தில் அருள்வாக்கு என்று நம்பிய அரசர், அதன்படி அரைகாசு அம்மனுக்கு வெல்லத்தால் விநாயகர் பிடித்து, வெல்லம் கலந்த பானகத்தை நெய்வேதியமாகவும் படைத்து வேண்டினார். தெய்வ அருள் இருந்தால் எதுவும் அதிசயம்.

சில விநாடிகளிலேயே அரைகாசு அம்மனின் சக்தியால் தொலைந்த பொருள் இருக்கும் இடம் பற்றி தகவல் கிடைத்தது. அன்றுமுதல் இன்றுவரை தொலைந்த பொருளோ அல்லது காணாமல் போனவர்கள் கிடைக்க வேண்டும் என்று அரைகாசு அம்மனிடம் வேண்டினாலோ உடனே பிராத்தனைக்கு பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சென்னை வண்டலூரில் உள்ள ரத்னமங்கலம் என்கிற சிற்றூரில் ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம் உள்ளது. 2004ம் வருடம் ரத்னமங்கலம் லட்சுமி குபேரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றபோது லட்சுமி விக்கிரகத்தை அழகு செய்த தங்க செயின் காணாமல் போனது. அரைக்காசு அம்மனை மனதார வேண்டிக் கொண்டு அந்த செயின் கிடைத்தால் அருகிலேயே அன்னைக்கு ஆலயம் கட்டி வழிபடுவதாக வேண்டிக் கொண்டார்கள்.

மகாலட்சுமிக்கு சாத்தப்பட்ட மலர்களைக் களைந்த போது அவற்றோடு அந்த செயின் திரும்பக் கிடைத்ததாம். அதன்படி இங்கு அந்த தேவிக்கு ஆலயம் எழும்பியது. பின் தேவியின் திருவுளப்படி அன்னையைச் சுற்றி 108 அம்மன்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆலயத்தில் நுழைந்ததும் வலது புறம் தல விநாயகர் அருள்கிறார். அவர் திருவுருவிற்கு நேர் எதிரே பதினெட்டாம் படி கருப்பர் கோயில் கொண்டுள்ளார். ஆண்டிற்கு ஒரு முறை ஆடி மாதம் 18ம் தேதியன்று மட்டும் இவர் சந்நதியின் கதவைத் திறந்து வைத்து விமரிசையாக வழிபாடுகள் நடக்கின்றன. மற்ற நாட்களில் எல்லாம் பூட்டிய கதவிற்கே வழிபாடு.

அரைக்காசு அம்மனைச் சுற்றி புகழ்பெற்ற சக்தி தலங்களில் அருளாட்சி புரிந்து வரும் 108 தேவியர்கள், அங்கே எந்தெந்த திருவுருவில் அருள்கின்றனரோ அதே வடிவில் வரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேவியருக்கும் விமான கலசம் உள்ளது. இதில் வடிவுடை, கொடியிடை, திருவுடை ஆகிய மூன்று அம்மன்களையும் பௌர்ணமி அன்று தரிசிப்பது விசேஷம். அதேபோல காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, பெண்களின் சபரிமலை தெய்வமான ஆற்றுக்கால் பகவதி, சக்குளத்துக்காவு பகவதியையும் இங்கே தரிசிக்க முடிகிறது.

இந்த அன்னையர்களுக்கு குங்கும அர்ச்சனை செய்யும் அன்பர்களுக்கு ஆலயத்தின் சார்பில் ஒரு முறத்தில் மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, கண்ணாடி வளையல், ரவிக்கைத் துணி, கருப்பரின் பிரசாதமான சந்தனம், அம்மனுக்குப் பிடித்த நிவேதனமான வெல்லம் ஆகியவற்றை வைத்து பிரசாதமாகத் தருவது வழக்கம்.

தேவியின் கருவறை முன் ஓங்காரமான பஞ்சலோகத்தினாலான திரிசூலம் இருக்கிறது.. அதன் முன் பலிபீடமும், சிம்ம வாகனமும் உள்ளன. அம்பிகையின் நேர் எதிரே கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்ரத்தின் வடிவான மேரு அமைந்துள்ளது. இந்த மேருவிற்கு பக்தர்கள் தாமே அபிஷேகம் செய்து வழிபடலாம்.

அர்த்த மண்டபத்தில் உள்ள விதானத்தில் 1 முதல் 108 வரை எண்கள் கொண்ட ப்ரச்ன யந்திரம் எழுதப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி, சனி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் அந்த யந்திரத்தின் கீழ் நின்று கீழே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் இருந்து ஒரு திருவுளச் சீட்டை அன்னையை தியானித்தபடி எடுக்கிறார்கள். அதில் எந்த எண் வருகிறதோ அதற்கான பலனும் அந்த திருவுளச் சீட்டிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்படி பயன் அடைந்த அன்பர்கள் ஏராளம். அந்த யந்திரத்தை அடுத்து விதானத்தில் ராசி சக்கரமும், நவகிரக மண்டலமும் சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளன.

கருவறையில் துவாரபாலகிகளாக பத்ரிணி, தீப்தா எனும் தேவியின் தோழியர் வீற்றிருக்கின்றனர். அரைக்காசு அன்னை பாசம், அங்குசம், வரத, அபயம் தாங்கி அர்த்த பத்மாசனத்தில் சாந்த வடிவினளாய் பொலிகிறாள். கொல்கொத்தா காளி, ஆயிரங்கை காளி, கல்யாண வரம் தரும் கல்யாண மாரியம்மன், ராகுகேது தோஷம் போக்கும் நாகாத்தம்மன், கருமாரியம்மன், பத்மாவதி, வகுளாதேவி ஆகியோருடன் துலங்கும் இக்கோயில் ஒரு மகத்தான சக்திபீடமாக திகழ்கிறது.

அரைகாசு அம்மனுக்கு வஸ்திரம் அணிவித்தால் குடும்பத்திற்கு சுபிக்ஷம் ஏற்படும். எலுமிச்சை மாலை அணிவித்தால் இன்னல்கள் மறையும். வெல்லத்தால் சர்க்கரை பொங்கல் அல்லது வெல்லத்தில் தயாரித்த பானகம் படைத்தால் தொலைந்தது திரும்ப கிடைக்கும்.