கலைஞர் எங்க ஊர்க்காரர்..! மு.க.ஸ்டாலின் முதல்வரானதை கொண்டாடும் ஆந்திர கிராமம்!

முதுபெரும் அரசியல் தலைவரும் திமுகவின் தலைவராக 50 வருடங்கள் இருந்தவருமான கலைஞரின் பூர்வீகம் ஆந்திரா என்று பல நாட்களாகவே ஒரு சர்ச்சை உண்டு. சமூக வலைதள விவாதங்களின் போது கலைஞர் தெலுங்கு பேசும் பூர்வீகத்தை கொண்டவர் என்றும் ஆந்திராவில் இருந்து திருவாரூரில் வந்து கலைஞரின் பெற்றோர் செட்டில் ஆனதாகவும் நாம் தமிழர் தம்பிகள் கூறுவது உண்டு.


இது ஒரு புறம் இருக்க கலைஞர் தன்னை தமிழன் என்று கூறிக் கொள்வதை விட திராவிடன் என்று கூறிக் கொண்டதற்கு காரணமே அவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் தான் என்றும் ஒரு வாதம் உண்டு. ஆனால் திமுகவினர் இதனை அபத்தம் என்று ஆதாரத்தோடு மறுக்கத் தயங்கியது இல்லை. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தில் உள்ள செருவு கொம்மபாளையம் எனும் கிராமம் லைம் லைட்டிற்கு வந்துள்ளது.

இதற்கு காரணம் கலைஞரின் மூதாதையர்கள் தங்கள் ஊரில் வாழ்ந்தவர்கள் என்றும் கலைஞர் தங்கள் ஊர்க்காரர் என்றும் செருவு கிராம மக்கள் கூறியுள்ளனர். அத்தோடு திமுக தலைவர் சட்டமன்ற தேர்தலில் வென்று முதலமைச்சரானதையும் செருவு கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இது மட்டும் இன்றி செருவு கொம்மபாளையம் கிராமமே தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது எனலாம். அந்த கிராமத்தி பேனர், தோரணங்கள் கட்டியும் அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து செருவு கொம்ம பாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வருலு கூறியதாவது: ஆந்திரா, தமிழகம் எல்லாம் ஒன்றாக இருந்த சமயத்தில், பல மன்னர்கள் இப்பகுதிகளை ஆண்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூதாதையர்கள் (தாத்தா) இந்த கால கட்டத்தில் விஜயநகர மன்னர்களின் அரசவையில் வித்வான்களாக பணியாற்றியுள்ளனர்.

அங்கிருந்து ஓங்கோல் அருகே இருந்த பெள்ளூரு சமஸ்தானத்தில் இவர்களது மூதாதையர்கள் நாகஸ்வர வித்வான்களாக வெங்கடகிரி அரசரிடம் பணி யாற்றினர். அப்போது, இவர்களின் வம்சாவளியினருக்கு பெள்ளூரு சமஸ்தானம் சார்பில் 5 குடும்பத் தாருக்கு தலா 30 ஏக்கர் நிலம் என மொத்தம் 150 ஏக்கர் நிலம் மானியமாக வழங்கப்பட்டது. இதில் அவர்கள் விவசாயம் செய்து வந்தனர். வறட்சி நிலவிய போது, நிலங்களை விற்றுவிட்டு இவர்கள் தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இப்போதுகூட இவர்களுடைய மூதாதையரின் குடும்பத்தார் இங்கு வசிக்கின்றனர் என்கிறார் வெங்கடேஸ்வருலு.

கடந்த 1960-ம் ஆண்டு, கருணாநிதி ஆந்திராவின் ஏலூருக்கு வந்தார். டிடெக்டிவ் நாவலாசிரியர்கள் சங்க கூட்டத்தில் கருணாநிதி தலைமையேற்க வந்தார். அப்போது அவர் தமது மூதாதையர் வாழ்ந்த ஊரான செருவு கொம்மபாளையம் குறித்தும், அங்குள்ள வம்சாவளியினர் குறித்தும், இப்போது வசித்து வருபவர்கள் குறித்தும் ஆர்வத் தோடு கேட்டறிந்தார் என ஜலந்தர் பாலகிருஷ்ணா எனும் நாவலாசிரியர் தற்போது கூறுகிறார்.

திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனை உற்சவத் தில் கலந்துகொள்ள இந்த ஊரை சேர்ந்த பல நாகஸ்வர கலைஞர்கள் செல்வது வழக்கம். அப்படியே சென்னையில் கருணாநிதியை சந்தித்து விட்டு வருவதும் வழக்கம். ஒவ்வொரு முறையும் கருணாநிதி தமிழக முதல்வராக பதவியேற்றபோது எங்கள் ஊரில் கொண்டாடுவதும் வழக்கம் அவர் இறந்த போதும் எங்கள் ஊரில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

எங்களது ஊரை பூர்வீகமாக கொண்டகுடும்பத்தை சேர்ந்த ஸ்டாலின் தமிழக முதல்வராகி இருப்பது எங்கள் ஊருக்கே பெருமை. எங்களது கிராம வரலாற்றில் கருணாநிதியின் குடும்பமும் இடம் பெற்றுள்ளது. அதிலிருந்து ஒருவர் தமிழகத்தின் முதல்வராகி இருப்பது எங்கள் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

விரைவில் நாங்கள் ஸ்டாலினை சந்திப்போம். இவ்வாறு வெங்க டேஸ்வருலு கூறினார். ஆனால் இது எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆர்வத்தில் இந்த கிராம மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்காள அல்லது உண்மை வேறு எதுவுமா? என்று வரலாற்று ஆய்வார்கள் ஆராய்ச்சி செய்தால் நலம்.