எம்.பி., தேர்தல்! அ.தி.மு.கவுடன் கூட்டணி! உறுதிப்படுத்திய அன்புமணி!

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி என்பதை பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி உறுதிப்படுத்தியுள்ளார்.


   சென்னை தண்டையார் பேட்டையில் மாற்று கட்சியினர் பா.ம.கவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். இதன் பிறகு அன்புமணி செய்தியாளர்களிடம் பேசினார்.

 

   அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். அனைத்து கேள்விகளுக்கும் அன்புமணி சளைக்காமல் பதில் அளித்தார்.

 

   கூட்டணி தொடர்பான கேள்விகளை கூட அன்புமணி மிகவும் லாவகமாக எதிர்கொண்டார். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும், அ.தி.மு.கவுடன் பா.ம.க கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

 

   இதற்கு சற்றும் யோசிக்காத அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். முடிவு எடுத்த பிறகு தெரிவிப்போம் என்றார். அதாவது அ.தி.மு.கவுடன் கூட்டணி குறித்து பேசி வருவதை அன்புமணி உறுதிப்படுத்தியுள்ளார்.

 

   அ.தி.மு.கவுடன் கூட்டணி குறித்து பேசுவதை அன்புமணி வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். எனவே பா.ம.க  இனி தி.மு.க கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டதும் பா.ம.க கூட்டணியை உறுதிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

 

  இதனிடையே பா.ம.க அ.தி.மு.கவுடன் 6 தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால் அ.தி.மு.க 4 தொகுதிகள் கொடுக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதியில் பா.ம.கவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி உறுதியாகும் என்று கூறப்படுகிறது.