கொந்தளித்த தமிழகம்! கர்நாடகம்! இந்தி 2வது மொழி தான்! அந்தர் பல்டி அடித்த அமித் ஷா!

இந்தியா முழுவதும் பொதுவான மொழியாக இருக்க இந்திக்கு மட்டுமே தகுதி உள்ளது என்கிற ரீதியில் பேசியிருந்த பேச்சு குறித்து அமித் ஷா புதுவிளக்கம் அளித்துள்ளார்.


கடந்த சனிக்கிழமை அன்று இந்தி மொழி தினம் தொடர்பான கருத்தரங்களில் கலந்து கொண்டு அமித் ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இந்தியா பல்வேறு மொழிகளை கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென தனித்துவம் உண்டு. ஆனால் உலக அரங்கில் இந்தியாவிற்கு என அடையாளப்படுத்த ஒரு பொது மொழி தேவை.

இன்றைய தேதியில் அப்படி இந்தியா முழுவதும் மக்களை இணைக்கும் தகுதியுடன் இருக்க கூடிய ஒரே மொழி இந்தி. இந்தி தான் இந்தியா முழுவதும் பரவலாக அதிகம் பேசப்படும் மொழி. என்று கூறியிருந்தார். மேலும் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா இந்தி மொழியை பொது மொழியாக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையானது.

தமிழகத்தில் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் எழுந்தது. இந்தியை திணிக்க பாஜக முயற்சிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. நாளை மறுநாள் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் அமித் ஷாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற உள்ளது. இதே போல் கர்நாடகாவிலும் இந்தியை ஏற்க முடியாது என்று அம்மாநிலத்தை ஆளும் பாஜகவின் முதலமைச்சரே அறிவித்தார்.

இப்படி தென் மாநிலங்களில் அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் இன்று அது குறித்து அவர் விளக்க்ம அளித்துள்ளார். அதில் அமித் ஷா கூறியிருப்பதாவது, மற்ற மாநில மொழிகளுக்கு பதிலாக இந்தியை திணிக்க வேண்டும் என்று தான் ஒரு போதும் வாதாடவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழிக்கு பிறகு இந்தியை இரண்டாவது மொழியாக கற்க வேண்டும் என்று தான் கூறினேன்.

நானே கூட இந்தி பேசாத குஜராத் மாநிலத்தை சேர்ந்தவன். இந்த விவகாரத்தில் சிலர் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். அது அவர்களின் விருப்பம். இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார். இந்தியை பொது மொழியாக ஏற்க வேண்டும் என்று கூறிவிட்டு தற்போது 2வது மொழியாக கற்கத்தான் கூறினேன் என்று அமித் ஷா பல்டி அடித்திருப்பது தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் எழுந்த எதிர்ப்பின் அடிப்படையில் தான் என்கிறார்கள்.