நாங்கள் எப்பொழுதும் ஈழத்தமிழருக்கு பாகுபாடு காட்ட மாட்டோம்..! குடியுரிமை சட்டத்திருத்தத்தை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்..!

இலங்கை தமிழருக்கு நாங்கள் எப்போதுமே பாரபட்சம் காட்ட மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்துள்ளார்.


லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில் சட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இந்த சட்டத்திற்கு எதிராக பல தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பா. சிதம்பரம், திருச்சி சிவா , மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். மேலும் இந்த சட்டமானது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் நிச்சயம் இதை நீதிமன்றம் தடை செய்யும் எனவும் தலைவர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்காதது குறித்து ஏன் எனவும் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே இலங்கையில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட திட்டத்தை கடந்த காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

ஆகையால் தான் தற்போது பிற நாடுகளான ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாட்டு மக்களுக்கான குடியுரிமை சட்டத்தை தற்போது இயற்றி உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டு கூறினார். மேலும் பேசிய அமைச்சர் யாருடைய மத உணர்வையும் தூண்டுவதற்காகவும் துன்புறுத்துவதாகவும் நாங்கள் இந்த சட்டத்தை கொண்டு வரவில்லை. மாறாக சிறுபான்மை மக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் இத்தகைய சட்டத்திருத்தத்தை தாங்கள் கொண்டுவந்துள்ளதாக அவர் கூறினார்.

எனவே இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எந்த காலகட்டத்திலும் முஸ்லிம்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் எதிரானது அல்ல எனவும் அமித்ஷா விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.