ராம்நாடு To புதுச்சேரி 400கிமீ! வெறும் 4 மணி நேரத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! சிறுவனை காப்பாற்றி நெகிழ வைத்த தமமுக டிரைவர்கள்!

உயிருக்கு போராடிய சிறுவனை மிக விரைவாக மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


ராமநாதபுரம் மாவட்டத்தில் அழகன்குளம் பள்ளிவாசல் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் நயினார் முகமது. இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் ஜெசிமா. இத்தம்பதியினருக்கு முகமது அமீர் என்ற 16 வயது மகன் உள்ளார். மலேசிய குடியுரிமை பெற்றுள்ள இளைஞர் அங்கு படித்து வந்துள்ளார்.

விடுமுறைக்கு ராமநாதபுரத்திற்கு வந்த முகமது அமீர் கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவர்களிடம் ஆலோசித்த முகமது அமீர், மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். ஆனாலும் வலி குறைந்தபாடில்லை. வலியின் வீரியம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் 1 மாதமாக படுத்த படுக்கையாக உள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் அவரை ராமநாதபுரம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நோயின் வீரியம் அதிகமாகி உள்ளதால் 4 அல்லது 5 மணிநேரத்திற்குள் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். 

விமானத்தின் மூலம் புதுச்சேரிக்கு சென்றாலும் நேரம் ஆகிவிடும் என்பதை அறிந்த பெற்றோர் தவித்துக்கொண்டிருந்தனர். த.ம.மு.க கட்சியின் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரிக்கு அழைத்து செல்ல திட்டமிட்டனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாஸ், இளைஞர் நிலை கண்டு சுதாரித்துக்கொண்டார்.

கட்சி தொண்டர்களும், போக்குவரத்து காவல்துறையினரும் சாலைகளில் முன்னறிவிப்பு விடுத்தபடி ஆம்புலன்ஸ் மிகவும் விரைவாக சென்று கொண்டிருந்தது. 5 மணி நேரத்திற்குள்ளாகவே ஆம்புலன்ஸ் ஜிப்மர் மருத்துவமனையை அடைந்தது.

சாதாரணமாக 9 அல்லது 10 மணி நேரமாகும் நிலையில், 4 மணிநேரம் 50 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் ஜிப்மர் மருத்துவமனைக்கு விரைவாக வந்தது. முகமது அமீருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது நலமாக உள்ளார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜாஸுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன.

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.