பெற்ற தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த அஜித் ரசிகர்! ஏன்னு தெரியுமா?

வேலூர் அருகே பெற்ற தந்தையை நடிகர் அஜித்தின் ரசிகர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். வீட்டில் இருந்தபடியே பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் அஜித். பெயருக்கு ஏற்றாற் போல் இந்த அஜித் நடிகர் அஜித்தின் வெறித்தனமான ரசிகர் என்று கூறப்படுகிறது. 22 வயதான அஜித், கட்டிட மேஸ்திரி வேலை பார்த்து வருகிறார். கிடைக்கும் சம்பளத்தை அப்படியே தந்தையிடம் கொடுக்கும் பழக்கம் அஜித்திற்கு இருந்துள்ளது.

   மேலும் செலவுக்கு தேவையான பணத்தை அவ்வப்போது தந்தையிடம் கேட்டு பெற்றுச் செல்வது அஜித்தின் வழக்கம். அஜித் படம் இன்று வெளியான நிலையில் நேற்று அந்த படத்திற்கு டிக்கெட் எடுக்க காட்பாடி சென்றுள்ளார் அஜித். ஆனால் டிக்கெட் விலை தாறுமாறாக இருந்த காரணத்தினால் வீட்டுக்கு சென்று தனது தந்தையிடம் படத்திற்கு செல்ல காசு கேட்டுள்ளார். ஏற்கனவே கொடுத்த காசில் படம் பார்க்குமாறும் இல்லை என்றால் வீட்டில் சும்மா இருக்குமாறும் அஜித்திடம் அவரது தந்தை பாண்டியன் கூறியுள்ளார்.

   மேலும் பாண்டியன் குடிபோதையில் இருந்த காரணத்தினால் அஜித்தை கடுமையாக வசைபாடியுள்ளார். வேலைக்கு சென்று சம்பாதிக்க துப்பில்லை படத்திற்கு போக காசு வேண்டுமா? என்று கேட்டுள்ளார். இதனால் அஜித்திற்கும் அவரது தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த அஜித்தின் தாய் கணவரிடம் சண்டை போட்டு மகனுக்கு காசு கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன், மகனுக்கு வக்காலத்து வாங்கிய மனைவியை ஆபாசமாக பேசியுள்ளார்.

   அதுவரை பொறுமையாக இருந்த அஜித், தாயை திட்டியதுடன், தனக்கும் காசு கொடுக்க மறுக்கும் தந்தை மீது கடுமையாக கோபம் அடைந்துள்ளனர். தந்தை என்றும் பார்க்காமல் அடித்து கீழே தள்ளியதுடன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து தந்தை மீது ஊற்றி அஜித் தீ வைத்துள்ளார். இதனால் அலறித்துடித்த பாண்டியனை அருகாமையில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 40 சதவீத காயங்களுடன் பாண்டியன் உயிருக்கு போராடி வருகிறார்.

  பாண்டியனை தீ வைத்து எரித்த அவரது மகன் அஜித்தை காட்பாடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அஜித் படத்திற்கு டிக்கெட் கிடைக்காத ஆத்திரத்தில் தந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய அஜித் விவகாரம் தான் தற்போது தமிழகத்தில் டாப் நியுசாக சென்று கொண்டிருக்கிறது.