யார் இந்த ஜூலியன் அசாஞ்சே? பிரிட்டன் 7 ஆண்டுகளாக காத்திருந்து கைது செய்தது ஏன்?

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டது சர்வதேச ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.


2006ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விக்கிலீக்ஸ் என்ற இணையதளம், அமெரிக்காவின் சிஐஏ, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்தது. இதனால் உலக நாடுகளின் கோபத்திற்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே ஆளானார்.

2012ஆம் ஆண்டில் அவரை கைது செய்ய சிஐஏ முயற்சித்தபோது அவர் லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். இடைப்பட்ட காலத்தில் அவர் மீது பாலியல் வழக்குகளும் பதியப்பட்டன. இதில் ஒருமுறை கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வந்த அவர் தற்போது லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அசாஞ்சேவுக்கு அளித்து வந்த அரசியல் தஞ்சத்தைப் ஈகுவடார் கைவிட்டது. இதையடுத்து தூதரகத்திற்குள் புகுந்து அவரை போலீசார் இழுத்து வந்தனர்.

ஒரு நாட்டில் உள்ள மற்றொரு நாட்டு தூதரகத்திற்குள் உள்நாட்டு போலீசார் யாரும் செல்லக்கூடாது என்பது வியன்னா ஒப்பந்தத்தின் முக்கிய விதி. ஆனால் இதையும் மீறி போலீசார் உள்ளே சென்று அசாஞ்சேவை இழுத்து வந்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. ஆனால் இதை அனுமதித்ததே ஈக்குவடார் அரசுதான் என்பது தெரியவந்துள்ளது. சர்வதேச ஒப்பந்த விதிமீறல் நடைபெற்றுள்ளதாக ஒருபுறம் சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ள போதும், அந்த ஒப்பந்தத்தின் பிரிவு 22 கூறுவதன்படி தூதர் அனுமதித்து அழைப்பு விடுத்தால்  போலீசார் உள்ளே செல்ல முடியும். அதன் அடிப்படையிலேயே லண்டன் போலீசார் அசாஞ்சேவை ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் சென்று கைது செய்துள்ளனர்.