சென்னை அருகே உள்ள திருக்கழுக்குன்றம் திருத்தலத்திற்கும், மதுராந்தகத்திற்கும் இடையே உள்ளது வழுவதூர் என்ற ஊர்.
வழக்கறிஞர் வடிவில் வந்து பெண்ணுக்கு நீதி கிடைக்கச் செய்த அக்னிபுரீஸ்வரர்!
இங்கு சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ ஆலயம் ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் இறைவன், ஒரு பெண் பக்தைக்காக வாதிட்டவர் என்பது இத்தலத்தின் சிறப்பை தூக்கிப் பிடிக்கிறது. இறைவனின் திரு நாமம் அக்னிபுரீஸ்வரர் என்பதாகும். இறைவியின் பெயர் சவுந்தரியநாயகி என்பதாகும். சகல செல்வங்களையும் வாரி வழங்கும் அன்னை என்பதால் இந்தப் பெயர் வந்துள்ளது. இருவரும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் 18 சித்தர்களும் வழிபட்டதற்கான ஆதாரமும், அவர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் இங்கு தங்கியிருந்து இறைவனை வழிபட்டதாகவும் கல்வெட்டுகள் மூலமாக அறியப்படுகிறது.
ஒரு முறை திருக்கழுக்குன்றத்தில் வசித்த ஒரு பெண், சில வீடுகளில் வேலை பார்த்து வாழ்க்கை நடத்தி வந்தார். அவளது கணவன் அந்த ஊரைச் சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தான். ஆனால் அந்தத் தொகையைக் காட்டிலும் நான்கு மடங்கு பணம் கொடுத்த பின்னரும் கூட, வட்டி கொடுத்தவர்கள் அந்தப் பெண்ணின் கணவனை துன்புறுத்தி வந்தனர். இதனால் மனமுடைந்த அந்தப் பெண், அந்தப் பகுதியைச் சேர்ந்த வழக்காடு மன்றத்தில் புகார் அளித்தாள்.
ஆனால் வழக்கை விசாரித்தவர்கள், பணம் இருந்தவர்களின் பக்கம் நின்றனர். இதனால் அந்தப் பெண்ணுக்கும், அவளது கணவனுக்கும் நீதி கிடைக்கவில்லை. அதனால் அந்தப் பெண் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை மனமுருகி வழிபட்டு முறையிட்டாள். இவ்வாறு அப்பெண் ஐந்து திங்கட்கிழமைகளில் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு இறைவனிடம் முறையிட அன்றிரவு அப்பெண்ணின் கனவில் தோன்றிய இறைவன், வழக்காடு மன்றத்தில் மீண்டும் பிராது கொடு, நியாயம் உன் பக்கம் இருப்பதால் உனக்கு வெற்றி கிடைக்கும் என்று தெரிவிக்க, அப்பெண்ணும் வழக்காடு மன்றத்திற்குச் சென்று மீண்டும் புகார் அளித்தாள்.
அப்போது இறைவன், வழக்காடுபவர் வடிவில் அந்த மன்றத்திற்குள் நுழைந்தார். அப்போது தவறு செய்தவர்களான, வட்டி வசூலிப்பாளர்களால் அந்த இடத்தில் இருக்க முடியவில்லை. அவர்கள் அனல் மேல் நிற்பது போல் துடிதுடித்தனர். அங்கிருந்து எழுந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து இறைவன் அந்த மன்றத்தில் தன்னுடைய தரப்பு வாதத்தை வைத்து அந்தப் பெண்ணுக்கு நீதி வாங்கிக் கொடுத்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த ஊர் பெரியவர்கள், ‘உங்களை இதற்கு முன்பு நாங்கள் இங்கே பார்த்ததில்லையே.. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு இறைவன், ‘நான் யார் என்று தெரிய வேண்டும் என்றால், இங்கிருந்து ஐந்து கல் தொலைவில் உள்ள ஆலயத்திற்கு வாருங்கள்’ என்று கூறினார்.
ஊர் மக்கள் அந்த ஆலயத்தை அடைய, அங்கு இறைவன் அக்னி பிழம்பாக மாறி காட்சி கொடுத்தார். பொய்யுரை கூறுபவர்கள், தவறு செய்பவர்கள், அவர்களுக்கு துணைபுரிபவர்கள் முன்னால் நான் அக்னிப்பிழம்பாகத் தோன்றுவேன் என்று இறைவன் கூர, இறைவனின் வெப்பம் அனைவரையும் வாட்டியது. இதையடுத்து வழக்காட வந்தவர் இறைவன் என்பதை உணர்ந்த அனைவரும் ஆச்சரியத்துடன், உள்ள மகிழ்வுடனும் இறைவனின் சன்னிதி முன்பாக விழுந்து வணங்கினர்.
அம்பாள் தன் ஆற்றலால் அக்னி பிழம்பாய் நின்ற இறைவனை குளிர்வித்து சாந்தப்படுத்தினார்.. அக்னி பிழம்பாக இறைவன் நின்றதால், ‘அக்னிபுரீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். கருவறையில் மூலவர் அக்னிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இந்த ஆலயத்தில் ராஜகோபுரத்துடன் 10 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சன்னிதி, வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. இது தவிர பைரவர், சனீஸ்வரர் ஆகியோருக்கும் சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. சூரியன், சந்திரன், நர்த்தன கணபதி, பால கணபதி, பாலமுருகன், பிரம்மா, துர்க்கை திருமேனிகளும் உள்ளன.
உஷ்னம் தொடர்பான நோய்கள் விலக, மனநலக் குறைபாடுகள் நீங்க, குடும்பக் கஷ்டங்கள் அகல, கடன் பிரச்சனை தீர, நீதிமன்ற வழக்குகளில் நியாயமான தீர்ப்பு கிட்ட, நினைத்த காரியம் நிறைவேற, தொடர்ந்து ஐந்து திங்கட்கிழமைகளில் இங்குள்ள இறைவனுக்கு நெய் தீபம் ஏற்றி, வில்வ இலை அர்ச்சனை செய்தால் நற்பலன்கள் கிடைக்கும் என்பதும், அம்பாளுக்கு பவுர்ணமியன்று மாலையில் தீபமிட்டு வழிபட்டால் மனம் போல் மண வாழ்க்கை அமையும் என்பதும் ஐதிகம்..