கடன் வாங்கிவிட்டு டிமிக்கி! நடிகைக்கு கடன் கொடுத்தவரால் நேர்ந்த கதி!

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது தங்கை, தாயார் ஆகியோர் கடன் மோசடிப் புகாரில் சிக்கியுள்ளனர்.


முன்னணி நடிகையாக வலம் வந்த ஷில்பா ஷெட்டி, புகழின் உச்சியில் இருக்கும்போதே, ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் வர்த்தகத்திலும் ஈடுபட்டனர். ஆனால், ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கியதால், அவர்கள் நடத்தி வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. 

இந்நிலையில், வாங்கிய கடனை செலுத்தத் தவறியதாகக் கூறி, ஷில்பா ஷெட்டி, அவரது தங்கை மற்றும் தாயார் மீது மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அம்ரா வழக்கு தொடர்ந்துள்ளார். இதுபற்றிய வழக்கு விசாரணையில், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்படி, அந்தேரி நீதிமன்றம் ஜூஹூ போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது. 

அம்ரா தரப்பில் கூறப்படும் புகாரின்படி, ஷில்பாவின் தந்தை சுரேந்தர ஷெட்டிக்கு, கடந்த 2015ம் ஆண்டு ரூ.21 லட்சம் கடன் அளித்துள்ளார். அதாவது, கடன் தொகையை 3 தவணைகளாக பிரித்து, முதலில், ரூ.8 லட்சமும், பிறகு ரூ.5 லட்சமும், இறுதியாக ரூ.8லட்சமும் என, அம்ரா வழங்கியுள்ளார். அம்ரா அளித்த பணத்தை, சுரேந்திர ஷெட்டிக்குச் சொந்தமான கார்கிஃப்ட்ஸ் நிறுவனம், காசோலை மூலமாக எடுத்து, பயன்படுத்தியுள்ளது. 

இந்த கடன்தொகையை, 18 சதவீத வட்டியுடன், ஜனவரி 2017ல் சுரேந்திர ஷெட்டி திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், எதிர்பாராவிதமாக, அக்டோபர் 11, 2016ல் சுரேந்திர ஷெட்டி உயிரிழந்துவிட்டார். அவர் சாகும் முன்பாக, இந்த தொழிலில் தனது மனைவி, மகள்கள் ஷில்பா மற்றும் ஷமிதா ஆகியோருக்கும் பங்கு உள்ளதாகவும், கடன் வாங்கியது பற்றி அவர்களுக்கும் தெரியும் எனவும் அம்ராவிடம் தெரிவித்துள்ளார். 

எனினும், இந்த கடனை திருப்பிக் கேட்டு, அம்ரா பலமுறை கோரிக்கை விடுத்தும், ஷில்பா, அவரது தங்கை மற்றும் தாயார் யாருமே முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்பேரில், 2017, ஏப்ரல் 24ம் தேதியன்று அம்ரா, அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். ஆனால், அதற்குப் பதில் அளித்த ஷில்பாவின் வக்கீல், பணத்தை தர முடியாது என்று மறுத்துள்ளனர்.

இதையடுத்து, ஜூன் 14, 2017 அன்று ஜூஹூ போலீசில் அம்ரா புகார் ஒன்று அளித்துள்ளார். பண மோசடி செய்ததாகக் கூறி, ஷில்பா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதியவும் அவர் கோரியிருந்தார். இதையேற்று, ஜூஹூ போலீசார், இந்த விவகாரத்தை சிவில் கோர்ட்டுக்கு மாற்றினர். அங்கு, அம்ரா மனுதாக்கல் செய்து, அதன்மீது கடந்த 2 ஆண்டுகளாக, விசாரணை நடந்து வருகிறது. 

இந்நிலையில், தற்போதைய விசாரணையில் ஷில்பாவின் குடும்பத்தார் குற்றம் செய்யும் நோக்கில் செயல்படுவதாக, தெரியவந்துள்ளது. அவர்கள் பற்றி தனி வழக்குப் பதிந்து, ஜூஹூ போலீஸ் விசாரணை நடத்தும்படி, கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. 

இதுபற்றி அம்ரா கூறுகையில், ஷில்பாவின் குடும்பத்தினரை நம்பி, என் வாழ்க்கையை மோசம்போய்விட்டது, என்றார். 

அதேசமயம், ஷில்பா ஷெட்டி இதுபற்றி பேசுகையில், ‘’குறிப்பிட்ட தொழிலதிபர் அம்ரா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர் எங்கள் வீட்டு கார் மெக்கானிக்காக பணிபுரிந்தது மட்டுமே நினைவில் உள்ளது. எங்களது தந்தையின் தொழிலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது நிதி பரிமாற்றம் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.