பிரபல நடிகர், இயக்குனர், கதாசிரியர் விசு திடீர் மரணம்..! அதிர்ச்சியில் உறவினர்கள்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் திகழ்ந்து வந்த விசு திடீரென மரணம் அடைந்துள்ளார்.


அண்மைக்காலமாகவே விசு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு உடல் நிலை மோசமானது. இதனை அடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் விசு அனுமதிக்கப்பட்டார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் விசு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 73. சம்சாரம் அது மின்சாரம் எனும் காலத்தால் அழியாத காவியத்தை படைத்தவர் விசு.  இந்த திரைப்படம் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதே போல் மணல் கயிறு, பெண்மணி அவள் கண்மணி போன்ற படங்களில் முத்திரை பதித்தவர்.

பல்வேறு திரைப்படங்களில் கதாசிரியராக விசு பணியாற்றி உள்ளார். நடிகராகவும் விசு ஜொலித்துள்ளார். ரஜினியுடன் மன்னன், உழைப்பாளி மற்றும் அருணாச்சலம் படங்களில் நடித்தவர். இவை அனைத்தையும் விட சன் டிவியில் நடிகர் விசு தொகுத்து வழங்கிய அரட்டை அரங்கம் வெகு பிரபலம்.

விசு காலமானதை தொடர்ந்து அவருக்கு ஏராளமானவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.